Sunday 9 June 2013

நாலடியார் நீதிக்கதை 29 பற்றும் பக்தியும்

29 பற்றும் பக்தியும்

 STORY BY Engineer/Lawyer.A.SRI VIJAYAN
NAALADIYAAR" POEM BY JAIN SAINTS
EXPLANATION TO THE POEM BY Prof.J.SRI CHANDRAN
புலமாடன் என்பவன் நல்ல கண்ணியமான அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தான். கைநிறைய சம்பளம். கோவில்களுக்கு தினமும் செல்வான். அங்கே, கதாகாலட்சேபம் நடந்தால் அங்கேயே இருந்து முழுவதும் கேட்டுவிட்டுத்தான் வீட்டிற்கு திரும்புவான். பக்திக்கதைகளைக் கேட்டு கேட்டு அவனுக்கு பக்தி அதிகரித்தது. பணத்தின் மீது வெறுப்பு கொள்ள  ஆரம்பித்ததான்.
அவன் மனைவியோ நமக்கென்று ஒரு சேமிப்பு வேண்டும், தனி வீடு வேண்டும். நான்வித இடங்களுக்கு செல்லும் பொழுது மரியாதை கிடைக்கும், எனவே பணத்தைச் சேமியுங்கள் என்றாள்.
அவனோ, அதைப் பொருட்படுத்தாமல் தனது சம்பாத்தியத்தில் அன்றாட செலவு போக மீதமுள்ளதை கோயில்களுக்கு காணிக்கை ஆக்கினான்.
ஒரு நாள், அவனது மகன் நோய் வாய்ப்பட்ட பொழுது, மருத்துவர் உடனடியாக மருத்துவ மனையில் தங்கி சிகிட்சை பெறவேண்டும் என்றார். அவ்வாறு செய்ய பணம் இல்லை. வழக்கம் போல் கோவிலுக்கு சென்றான்.
அங்கே அவனது பழைய நண்பர், சமந்தபத்திரர் என்னும் ஒரு இல்லறத்துறவி, புலமாடனின் செய்தியைக் கேட்டறிந்து மருத்துவத்திற்கு தேவையான பணத்தைக் கொடுத்து உதவினார். மகனும் பிழைத்தான்.
தான் கோவிலுக்கு சென்றதால்தான் அங்கே சமந்தபத்திரர் வந்தார், அதனால் கடவுளைப் பழிக்காதே என்று மனைவியிடம் கூறினான்.
அப்பொழுது அங்கே வந்த சமந்தபத்திரர், “சாஸ்திரங்களை தவறாகப் புரிந்து கொள்ளாதே புலமாடா” என்றார்.
குழப்பமடைந்த புலமாடன், “செல்வத்தின் மீது ஆசை வைக்காதே, செலவழிக்காமல் சேர்த்து வைக்காதே என்று கூறியுள்ளார்களே, அது தவறா?” என்றான்.
சமந்தபத்திரர், “ஆசை வைக்காதே என்றால் தவறான வழியில் ஈட்டாதே என்று பொருள்; சேமிக்காதே என்றால் சரியான வழியில் செலவு செய்யாமல் சேர்த்து வைக்காதே என்று பொருள்” என்றார்.
மேலும், “நல்ல வழியில் ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை தமது செலவிற்கும், ஒரு பகுதியை எதிர்கால தேவைக்கும் போக ஒரு பகுதியை அற வழிகளில் செலவு செய்யவேண்டும்” என்றார்.
சிந்தை தெளிந்த புலமாடன் மனைவியிடம் மன்னிப்பு கோரினான்.

அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
செத்த பிணத்திற் கடை.                                  நாலடியார்      281
பொருள்: காவி தோய்ந்த ஆடையை இடுப்பில் சுற்றிக்கொண்டு ஞான வாழ்வு வாழ்ந்தாலும், பத்தோ எட்டோ உடையவராயின் அவர்கள் பலர் இடையிலும் நன்கு மதிக்கப்படும் சிறப்பினை அடைவார்கள். அவ்வாறன்றி, உயர்குடியிலே பிறந்தவராயினும், ஒரு பொருளும் இல்லாதார் உயிர்போன பிணத்திலும் இழிந்தவராகக் கருதப்படுவர். 

கல்லோங்கு உயர்வரைமேல் காந்தள் மலராக்கால்
செல்லாவாம் செம்பொறி வண்டினம்; - கொல்லைக்
கலாஅற் கிளிகடியும் கானக நாட!
இலாஅஅர்க் கில்லை தமர்.                               நாலடியார்      283

பொருள்: கல்லாலே கிளிகளை ஓட்டுதற்கு இடமான காடுகள் சூழ்ந்த நாட்டை உடைய வேந்தனே! பெருங்கற்களையுடைய மலையின் மேல் காந்தள் மலர்கள் மலராதபோது, சிவந்த புள்ளிகளையுடைய வண்டினங்கள் அங்கே போகமாட்டா. அவ்வாறே பொருள் இல்லாதவர்க்கு உறவினர் இல்லை.

5 comments:

  1. I too had confusion in this matter.
    Now it is somewhat answered.

    Thanks 4 the author.

    Sudalai

    ReplyDelete
  2. very fine prediction of the poem. thanks lot

    ReplyDelete
  3. புலமாடனுக்கு மட்டுமல்ல. எங்களுக்கும்கூட சிந்தை தெளிந்துவிட்டது.

    ReplyDelete
  4. innum enna seivathenru theriyavillaiye!?

    ReplyDelete
  5. Dear Mr.Vittal,
    The matter is clear.
    The Naladiyar or the story is not against Bakthi.
    It asks us to spend money on Dharma route; However asks us to keep money for us also.
    Thats all, it is simply told in Tamil, "Thanakku minjthaan Dhaanamum Dharmamum"

    Thank you.
    Subbiah

    ReplyDelete