Sunday 9 June 2013

நாலடியார் நீதிக்கதை 29 பற்றும் பக்தியும்

29 பற்றும் பக்தியும்

 STORY BY Engineer/Lawyer.A.SRI VIJAYAN
NAALADIYAAR" POEM BY JAIN SAINTS
EXPLANATION TO THE POEM BY Prof.J.SRI CHANDRAN
புலமாடன் என்பவன் நல்ல கண்ணியமான அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தான். கைநிறைய சம்பளம். கோவில்களுக்கு தினமும் செல்வான். அங்கே, கதாகாலட்சேபம் நடந்தால் அங்கேயே இருந்து முழுவதும் கேட்டுவிட்டுத்தான் வீட்டிற்கு திரும்புவான். பக்திக்கதைகளைக் கேட்டு கேட்டு அவனுக்கு பக்தி அதிகரித்தது. பணத்தின் மீது வெறுப்பு கொள்ள  ஆரம்பித்ததான்.
அவன் மனைவியோ நமக்கென்று ஒரு சேமிப்பு வேண்டும், தனி வீடு வேண்டும். நான்வித இடங்களுக்கு செல்லும் பொழுது மரியாதை கிடைக்கும், எனவே பணத்தைச் சேமியுங்கள் என்றாள்.
அவனோ, அதைப் பொருட்படுத்தாமல் தனது சம்பாத்தியத்தில் அன்றாட செலவு போக மீதமுள்ளதை கோயில்களுக்கு காணிக்கை ஆக்கினான்.
ஒரு நாள், அவனது மகன் நோய் வாய்ப்பட்ட பொழுது, மருத்துவர் உடனடியாக மருத்துவ மனையில் தங்கி சிகிட்சை பெறவேண்டும் என்றார். அவ்வாறு செய்ய பணம் இல்லை. வழக்கம் போல் கோவிலுக்கு சென்றான்.
அங்கே அவனது பழைய நண்பர், சமந்தபத்திரர் என்னும் ஒரு இல்லறத்துறவி, புலமாடனின் செய்தியைக் கேட்டறிந்து மருத்துவத்திற்கு தேவையான பணத்தைக் கொடுத்து உதவினார். மகனும் பிழைத்தான்.
தான் கோவிலுக்கு சென்றதால்தான் அங்கே சமந்தபத்திரர் வந்தார், அதனால் கடவுளைப் பழிக்காதே என்று மனைவியிடம் கூறினான்.
அப்பொழுது அங்கே வந்த சமந்தபத்திரர், “சாஸ்திரங்களை தவறாகப் புரிந்து கொள்ளாதே புலமாடா” என்றார்.
குழப்பமடைந்த புலமாடன், “செல்வத்தின் மீது ஆசை வைக்காதே, செலவழிக்காமல் சேர்த்து வைக்காதே என்று கூறியுள்ளார்களே, அது தவறா?” என்றான்.
சமந்தபத்திரர், “ஆசை வைக்காதே என்றால் தவறான வழியில் ஈட்டாதே என்று பொருள்; சேமிக்காதே என்றால் சரியான வழியில் செலவு செய்யாமல் சேர்த்து வைக்காதே என்று பொருள்” என்றார்.
மேலும், “நல்ல வழியில் ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை தமது செலவிற்கும், ஒரு பகுதியை எதிர்கால தேவைக்கும் போக ஒரு பகுதியை அற வழிகளில் செலவு செய்யவேண்டும்” என்றார்.
சிந்தை தெளிந்த புலமாடன் மனைவியிடம் மன்னிப்பு கோரினான்.

அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
செத்த பிணத்திற் கடை.                                  நாலடியார்      281
பொருள்: காவி தோய்ந்த ஆடையை இடுப்பில் சுற்றிக்கொண்டு ஞான வாழ்வு வாழ்ந்தாலும், பத்தோ எட்டோ உடையவராயின் அவர்கள் பலர் இடையிலும் நன்கு மதிக்கப்படும் சிறப்பினை அடைவார்கள். அவ்வாறன்றி, உயர்குடியிலே பிறந்தவராயினும், ஒரு பொருளும் இல்லாதார் உயிர்போன பிணத்திலும் இழிந்தவராகக் கருதப்படுவர். 

கல்லோங்கு உயர்வரைமேல் காந்தள் மலராக்கால்
செல்லாவாம் செம்பொறி வண்டினம்; - கொல்லைக்
கலாஅற் கிளிகடியும் கானக நாட!
இலாஅஅர்க் கில்லை தமர்.                               நாலடியார்      283

பொருள்: கல்லாலே கிளிகளை ஓட்டுதற்கு இடமான காடுகள் சூழ்ந்த நாட்டை உடைய வேந்தனே! பெருங்கற்களையுடைய மலையின் மேல் காந்தள் மலர்கள் மலராதபோது, சிவந்த புள்ளிகளையுடைய வண்டினங்கள் அங்கே போகமாட்டா. அவ்வாறே பொருள் இல்லாதவர்க்கு உறவினர் இல்லை.

Saturday 8 June 2013

Naladiyar Story 24 நட்பு


  STORY BY Engineer/Lawyer.A.SRI VIJAYAN
NAALADIYAAR" POEM BY JAIN SAINTS
EXPLANATION TO THE POEM BY Prof.J.SRI CHANDRAN
24 நட்பு
 ஒரு சிங்கக்குட்டி ஒரு கழுதைக்குட்டியுடன் நட்பு கொண்டிருந்தது. அதனால் கழுதைக்கூட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே இருந்த பெரிய கழுதைகள் கூட, வயதில் சிறிய சிங்கக்குட்டிக்கு மரியாதை கொடுத்தன. அது மிக்க மகிழ்ச்சியைக் தந்ததால், சிங்கக்குட்டி அடிக்கடி கழுதைக்கூட்டத்திற்கு சென்று மகிழ்ந்தது.
தாய் சிங்கம் தன் குட்டியிடம், “நாம் சிங்கங்களுடன்தான் வாழ வேண்டும். பொழுது போக்குவதற்கோ, விளையாடுவதற்கோ சற்று நேரம் தனக்கு பிடித்தவர்களிடம் சென்று நேரம் கழிப்பது ஏற்புடையது” என்று எச்சரித்தது.
கழுதைக்கூட்டத்தில் தனக்கு கிடக்கும் அந்தஸ்தே பெரியதாகப் பட்டதால், அங்கேயே குட்டி வாழ ஆரம்பித்தது.
ஒரு நாள், ஓநாய் ஒன்று கழுதைகளைத் துரத்தியது. கழுதைகள் பயந்து ஓடின, சிங்கக்குட்டிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தானும் அவற்றுடனே ஓடியது.
கழுதைகள் தங்களது உயிருக்கு ஆபத்து என்பதால் வேகமாக ஓடின. சிங்கக்குட்டிக்கோ எதற்காக ஓடுகிறோம் என்பதும் தெரியவில்லை, தான் ஒரு சிங்கக்குட்டி என்பதும் புரியவில்லை. அதனால் சரியாக ஓட முடியவில்லை.
சற்று நேரத்தில், கழுதைகள் தப்பித்துக் கொண்டன. சிங்கக்குட்டி மாட்டிக்கொண்டது. முதலில் ஓநாய் சிங்கக்குட்டியைப் பார்த்து பயந்தாலும், அதன் நிலைமையைப் பார்த்து என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொண்டது.
எனவே தனியாய் நின்ற சிங்கக்குட்டியை கொன்று தின்றது.

நுண்ணுணர்வி னாரோடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் - நுண்ணூல்
உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
புணர்தல் நிரயத்துள் ஒன்று               நாலடியார் 233

பொருள்: நுட்பமான அறிவினை உடையவர்களுடன் நட்புச் செய்து அதன் பயனை அனுபவித்தல், விண்ணுலக இன்பத்தினைப் போல மேன்மையுடையதாகும். நுட்பமான நூலறிவு அற்ற பயனில்லாதவருடன் நட்புக் கொள்ளுதல் நரகங்கள் ஒன்றினுள் சேர்ந்திருத்தல் போல் துன்பம் தருவதாகும்

Wednesday 29 May 2013

Naladiyar Story எதிலும் பயம், எங்கே இன்பம்


  STORY BY Engineer/Lawyer.A.SRI VIJAYAN
NAALADIYAAR" POEM BY JAIN SAINTS
EXPLANATION TO THE POEM BY Prof.J.SRI CHANDRAN

நரசிம்மன் என்கிற நடுத்தர வயதுக்காரர் இருந்தார், அனைவரிடமும் கனிவாக பழகுவார். கண்ணியமானவர்.
நல்ல உயர் பதவியில் இருந்தார். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாய் வாழ்ந்தார், எந்தக் குறையும் இல்லை. ஆனாலும், அவருக்கு ஒரு பழக்கம் ஏற்பட்டது. இணையத்தில் நீலப்படங்களைப் பார்ப்பது.
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இணையத்தில் படங்களைப் பார்ப்பார். இதில் ஒரு அதீத மகிழ்ச்சி ஏற்பட்டாலும் உள்ளுக்குள் ஒரு குற்ற உணர்வு இருந்தது. தான் இவ்வாறு யாருக்கும் தெரியாமல் படம் பார்ப்பது தவறா, இல்லையா? தவறென்றால் தவிர்ப்பது எவ்வாறு?
எந்த முடிவுக்கும் அவரால் முடியவில்லை. ஒரு மனோதத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை கேட்டார்.
நிபுணரும், இது நிறைய ஆட்களுக்கு இருக்கிறது என்றும் அதனால் தனக்கு மட்டும் இருப்பதாக பயப்பட வேண்டாம் என்றும் கூறிவிட்டு சில கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு சொன்னார்.
ஏன் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது, என்ன கிடைக்கிறது?
ஒரு இனம் புரியாத இன்பம் கிடைக்கிறது என்றார் நரசிம்மன்.
எப்பொழுது கிடைக்கிறது? பார்க்க வேண்டும் என்று தோன்றும் பொழுதா?
இல்லை, அப்பொழுது ஒரு தவிப்புதான் இருக்கும். கூடவே யாரும் பார்த்துவிடக் கூடாதே என்கிற பயமும் இருக்கும்.
சரி, உங்கள் வீட்டில், உங்கள் அறையில் படத்தைப் பார்ப்பதற்காக நுழையும் பொழுதா? என்றார் மருத்துவர்.
அப்பொழுது என் வீட்டில் யாராவது பார்த்து விடப்போகிறார்கள் என்று பயமாய் இருக்கும். ஆனாலும் உள்ளே வந்து விடுவேன்.
சரி, பார்க்கும் பொழுது இன்பம் கிடைக்குமா?
அப்பொழுதும் கிடைக்காது. நிமிடத்திற்கு ஒருமுறை கதவு, சாளரம் எல்லாம் மூடியிருக்கிறதா என்று கவனித்துக் கொண்டேயிருப்பேன். கூடவே, யாராவது வந்து கதவை தட்டப் போகிறார்கள் என்று பயம் வேறு இருக்கும் என்றார் நரசிம்மன்.
சரி, எப்பொழுதுதான், நீங்கள் சொன்ன அந்த இன்பம் கிடைக்கும். பார்த்து முடித்தவுடனா? என்று கேட்டார்.
அப்பொழுது, இணையத்தில் ஏற்கனவே தான் சென்ற பக்கங்களுக்கு, தனது மகன் கணினியை இயக்கும் பொழுது தெரியாமல் சென்றுவிட்டால் என்ன செய்வது என்ற பயம் இருக்கும். நிம்மதியாக அலுவலகத்தில் கூட வேலை ஓடாது என்றார்.
இப்பொழுது பேசினார் மனோதத்துவ நிபுணர், “பார்க்க வேண்டும் என்று தோன்றும் பொழுது பயம், அறையில் நுழையும் பொழுது பயம், பார்க்கும் பொழுது பயம், பார்த்த பின் பயம், அதற்கு பின்னும் பயம்; இதன் நடுவில் எங்கே அந்த அற்ப மகிழ்ச்சி”
குற்ற/ பய உணர்வோடு செய்யும் எந்தவொரு வேலையும் நிச்சயமாய்  மன நோயின் வெளிப்பாடுதான். இன்பம் கிடைப்பது போல் தோன்றுவது ஒரு மாயைதான் என்றார்.
உண்மைதான் என்றார் நரசிம்மன்.
சரி இந்தத் தொல்லையிலிருந்து எவ்வாறு விடுபடுவது. உங்களுக்கு நேரம் கிடைக்கிறது, அதனால்தான் மனம் அலை பாய்கிறது, படமும் பார்க்க முடிகிறது. அந்த நேரத்தில், நல்ல விஷயத்தில் உங்கள் மனத்தை திருப்புங்கள். குடும்பத்தினருடன் செலவளியுங்கள். நூலகம் செல்லுங்கள், கிடைக்கும் நூலை எடுத்துப் படியுங்கள் என்று அறிவுறுத்தினார்.
மேலும், நீங்கள் காண்பதும் கேட்பதும் உட்கொள்வதும் நல்லது என்றால், உங்களுக்கு நல்ல  சிந்தனை உண்டாகும். அதனால் உங்கள் ஒழுக்கம் நல்லொழுக்கமாய் ஆகும் என்றார்.
தெளிவடைந்த நரசிம்மன், பிறகு அதைப்பற்றி யோசிப்பதே இல்லை.
புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்                           நாலடியார் - 83
விளக்கம்: பிறர் மனைவியை நாடி அவள் வீட்டிற்குள் புகும்போது அச்சம்; இன்பம் நுகரும்போது அச்சம்; திரும்பி வெளியே வரும்போது அச்சம்; பிறர் அறியாமல் காப்பதில் அச்சம்; இவ்வாறு எப்போதும் அச்சம்; இவற்றையெல்லாம் எண்ணிப் பாராது ஒருவன் பிறன் மனைவியை விரும்புவது என்ன பயன் கருதியோ?