Wednesday 29 May 2013

Naladiyar Story எதிலும் பயம், எங்கே இன்பம்


  STORY BY Engineer/Lawyer.A.SRI VIJAYAN
NAALADIYAAR" POEM BY JAIN SAINTS
EXPLANATION TO THE POEM BY Prof.J.SRI CHANDRAN

நரசிம்மன் என்கிற நடுத்தர வயதுக்காரர் இருந்தார், அனைவரிடமும் கனிவாக பழகுவார். கண்ணியமானவர்.
நல்ல உயர் பதவியில் இருந்தார். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாய் வாழ்ந்தார், எந்தக் குறையும் இல்லை. ஆனாலும், அவருக்கு ஒரு பழக்கம் ஏற்பட்டது. இணையத்தில் நீலப்படங்களைப் பார்ப்பது.
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இணையத்தில் படங்களைப் பார்ப்பார். இதில் ஒரு அதீத மகிழ்ச்சி ஏற்பட்டாலும் உள்ளுக்குள் ஒரு குற்ற உணர்வு இருந்தது. தான் இவ்வாறு யாருக்கும் தெரியாமல் படம் பார்ப்பது தவறா, இல்லையா? தவறென்றால் தவிர்ப்பது எவ்வாறு?
எந்த முடிவுக்கும் அவரால் முடியவில்லை. ஒரு மனோதத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை கேட்டார்.
நிபுணரும், இது நிறைய ஆட்களுக்கு இருக்கிறது என்றும் அதனால் தனக்கு மட்டும் இருப்பதாக பயப்பட வேண்டாம் என்றும் கூறிவிட்டு சில கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு சொன்னார்.
ஏன் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது, என்ன கிடைக்கிறது?
ஒரு இனம் புரியாத இன்பம் கிடைக்கிறது என்றார் நரசிம்மன்.
எப்பொழுது கிடைக்கிறது? பார்க்க வேண்டும் என்று தோன்றும் பொழுதா?
இல்லை, அப்பொழுது ஒரு தவிப்புதான் இருக்கும். கூடவே யாரும் பார்த்துவிடக் கூடாதே என்கிற பயமும் இருக்கும்.
சரி, உங்கள் வீட்டில், உங்கள் அறையில் படத்தைப் பார்ப்பதற்காக நுழையும் பொழுதா? என்றார் மருத்துவர்.
அப்பொழுது என் வீட்டில் யாராவது பார்த்து விடப்போகிறார்கள் என்று பயமாய் இருக்கும். ஆனாலும் உள்ளே வந்து விடுவேன்.
சரி, பார்க்கும் பொழுது இன்பம் கிடைக்குமா?
அப்பொழுதும் கிடைக்காது. நிமிடத்திற்கு ஒருமுறை கதவு, சாளரம் எல்லாம் மூடியிருக்கிறதா என்று கவனித்துக் கொண்டேயிருப்பேன். கூடவே, யாராவது வந்து கதவை தட்டப் போகிறார்கள் என்று பயம் வேறு இருக்கும் என்றார் நரசிம்மன்.
சரி, எப்பொழுதுதான், நீங்கள் சொன்ன அந்த இன்பம் கிடைக்கும். பார்த்து முடித்தவுடனா? என்று கேட்டார்.
அப்பொழுது, இணையத்தில் ஏற்கனவே தான் சென்ற பக்கங்களுக்கு, தனது மகன் கணினியை இயக்கும் பொழுது தெரியாமல் சென்றுவிட்டால் என்ன செய்வது என்ற பயம் இருக்கும். நிம்மதியாக அலுவலகத்தில் கூட வேலை ஓடாது என்றார்.
இப்பொழுது பேசினார் மனோதத்துவ நிபுணர், “பார்க்க வேண்டும் என்று தோன்றும் பொழுது பயம், அறையில் நுழையும் பொழுது பயம், பார்க்கும் பொழுது பயம், பார்த்த பின் பயம், அதற்கு பின்னும் பயம்; இதன் நடுவில் எங்கே அந்த அற்ப மகிழ்ச்சி”
குற்ற/ பய உணர்வோடு செய்யும் எந்தவொரு வேலையும் நிச்சயமாய்  மன நோயின் வெளிப்பாடுதான். இன்பம் கிடைப்பது போல் தோன்றுவது ஒரு மாயைதான் என்றார்.
உண்மைதான் என்றார் நரசிம்மன்.
சரி இந்தத் தொல்லையிலிருந்து எவ்வாறு விடுபடுவது. உங்களுக்கு நேரம் கிடைக்கிறது, அதனால்தான் மனம் அலை பாய்கிறது, படமும் பார்க்க முடிகிறது. அந்த நேரத்தில், நல்ல விஷயத்தில் உங்கள் மனத்தை திருப்புங்கள். குடும்பத்தினருடன் செலவளியுங்கள். நூலகம் செல்லுங்கள், கிடைக்கும் நூலை எடுத்துப் படியுங்கள் என்று அறிவுறுத்தினார்.
மேலும், நீங்கள் காண்பதும் கேட்பதும் உட்கொள்வதும் நல்லது என்றால், உங்களுக்கு நல்ல  சிந்தனை உண்டாகும். அதனால் உங்கள் ஒழுக்கம் நல்லொழுக்கமாய் ஆகும் என்றார்.
தெளிவடைந்த நரசிம்மன், பிறகு அதைப்பற்றி யோசிப்பதே இல்லை.
புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்                           நாலடியார் - 83
விளக்கம்: பிறர் மனைவியை நாடி அவள் வீட்டிற்குள் புகும்போது அச்சம்; இன்பம் நுகரும்போது அச்சம்; திரும்பி வெளியே வரும்போது அச்சம்; பிறர் அறியாமல் காப்பதில் அச்சம்; இவ்வாறு எப்போதும் அச்சம்; இவற்றையெல்லாம் எண்ணிப் பாராது ஒருவன் பிறன் மனைவியை விரும்புவது என்ன பயன் கருதியோ? 

No comments:

Post a Comment