Saturday 16 February 2013

NALADIAR BASED STORY 16 வாழ்க்கையில் இதுவெல்லாம் சகஜம்


16 வாழ்க்கையில் இதுவெல்லாம் சகஜம்
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

EXPLANATION TO THE POEM Prof.J.SRI CHANDRAN

அது ஒரு திருமண வைபவம். திருமணம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது, விழாவிற்கு வந்தவர்கள் கூட்டமாய் கூடி உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
அதில் ஒரு குழாமில், நடு நாயகமாக அண்ணாசாமியப்பன்  என்பவர் அமர்ந்திருந்தார்; மற்றவர்களும் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். கேட்பதற்கு ஆட்கள் இருந்ததால் அண்ணாசாமியப்பனும் தான் எல்லாம் தெரிந்தவர் போல பெருமை சாற்றிக் கொண்டிருந்தார்.
நீதிபதி ஒருவரை தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், அவர் முன்னாளில் சாதாரண வக்கீலாக இருந்த பொழுது, வழக்குகள் கிடைக்காமல் இருந்ததாகவும், இவர்தான் அவருக்கு உதவிகள் செய்ததாகவும் கூறிக்கொண்டார்.
அப்பொழுது, அதை உண்மையென்று நம்பிய ஒருவர், தனக்கு முதியோர் உதவி பணம் அரசாங்கத்திடமிருந்து வரவில்லை, வட்டாட்சி அலுவலகத்தில் மனு செய்து செய்துள்ளதாகவும், அங்கே யாரையாவது தெரியுமா என்று வினவினார். தனக்கு வட்டாட்சியரை நன்றாகத் தெரியும் என்றார்; உடனே வேறொருவர் தான் பட்டாவிற்கு மனு செய்துள்ளதாகச் சொன்னார்.
இவ்வாறாக ஆளாளுக்கு ஏதோதோ கூற, நம்மவரும் நிறைய வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டே வந்தார். ஒருவர் மட்டும் எதுவும் கேட்கவில்லை, அமைதியாகவே இருந்தார். உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்றார் அண்ணாசாமியப்பன்.
“ஆமாம், ஆனால் தனிமையில்தான் சொல்லவேண்டும்” என்றார்; “சரி, வாருங்கள்” என்று தனியாக அழைத்துச் சென்று நமது ஜம்பப் பேர்வழி, “இப்பொழுது சொல்லுங்கள்” என்றார்.
அந்த புதிய மனிதர், “நான்தான் இந்த ஊருக்கு தாசில்தார், அதாவது வட்டாட்சியர்” என்றார்.
அண்ணாசாமியப்பனுக்கோ, ஒருவேளை இவரும் தன்னைப் போலவே ஒரு பொய்ப் பேர்வழியாக இருப்பாரோ என்று சந்தேகம்; அப்படியென்றால் முன்னரே கூறியிருக்கலாமே என்று கேட்டார்.
அந்த நபர், “அவைக்கு நடுவில் சொன்னால், உங்களுக்கு மான நட்டம் உருவாகும், எனக்கு அது நோக்கமல்ல; இனிமேலும் இது போன்ற புரட்டுகளில் ஈடுபடாதீர்கள்” என்று அறிவுறுத்தி எச்சரித்தார்.
அப்பொழுது அவரின் பெருந்தன்மை புரிந்தது.

புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து                         நாலடியார்  155

பொருள்: கல்வியறிவு இல்லாத பயனற்ற வீணர் அவையில் நூல்களைக் கல்லாத ஒருவன் பொருத்தமில்லாமல் உரைப்பனவற்றையும் (அறிவுடையோர்) அவனது குற்றங்களைச் சுட்டிக் காட்டினால், அவன் பல்லோரிடை அவமானப்பட நேரிடும் என்பதற்காக இரங்கி, மனம் வருந்தினாலும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பர்

No comments:

Post a Comment