Wednesday 6 February 2013

NALADIYAR BASED STORY 17 எது சிறந்த அரசு?


எது சிறந்த அரசு?
STORY BY Engineerr/Lawyer.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM


நம் இந்திய நாட்டின் இரு அண்டை மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல்வர்கள் ஆண்டு வந்தனர். ஒரு மாநிலம் நல்ல வளமாய் இருந்தது. செழிப்பான விவசாயம், விளைச்சல், தொழிற்சாலை, வளமான வர்த்தகம், அறிவார்ந்த மக்கள் என்று அமோகமாய் இருந்தது.
மற்றொரு மாநிலத்தில் நல்ல அளவான மழை பெய்தது. ஆனாலும், நல்ல விளைச்சல் இல்லை. கலையில்லா முகத்துடன் மக்கள் ஏழ்மையில் இருந்தனர். முதலமைச்சருக்கு வருத்தம், இருண்ட சூழ்நிலையிலிருந்து மாநிலத்தையும், மக்களையும் காப்பாற்ற முடியவில்லையே என்கிற ஏக்கம். மாநிலத்தின் முதலமைச்சரும் இலவசத் திட்டங்கள் நிறைய அறிவித்தார். மக்களும் அந்த இலவசங்களை பெற்றனர்.
இந்தச் சூழ்நிலையில் ஒருநாள், மாநில முதல்வர்களின் மாநாடு தலைநகர் தில்லியில் நடந்தது. இரு மாநில முதல்வர்களும் அங்கே சந்தித்துக் கொண்டனர்.
இரண்டாம் மாநிலத்தின் முதல்வர் தன்னைப் பற்றி பெருமையாய் சொல்லிக் கொண்டார். தான் இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்றும்; தன் மக்களுக்கு பல நல்ல இலவசத் திட்டங்களை அறிவித்து சிறப்பானதாக தன் அரசினை நடத்துவதாகவும் பெருமை பேசினார்.
முதலாமவர், “நீங்கள் சொல்வது சரிதான், எங்களுக்கு அது மாதிரி ஒரு வாய்ப்பே கிடைக்க வில்லை. அது மாதிரி யாசகம் பெறுவதற்கு எங்கள் மாநிலத்தில் யாருமே இல்லை” என்றார் அமைதியாக.
சுரீர் என்றது அடுத்தவருக்கு;  உழைத்து முன்னேறுவதற்கு வாய்ப்பை  ஏற்படுத்தித் தராமல் மக்களை சோம்பேறியாக்கியது தனது தவறு என்பதை உணர்ந்தார்.
உண்மையில் சிறந்த அரசு என்பது ஏழைகள் இல்லாமல் ஆக்குவதுதானே தவிர ஏழைகளுக்கு இலவசம் அளிப்பதில் அல்ல.

பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்கு
உரியார் உரிமை அடக்கம் - தெரியுங்கால்
செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப எனின்.                 நாலடியார்  170
பொருள்: பெரியோர்க்குப் பெருமை தருவது, எளிமையையுணர்த்தும் செருக்கிலாப் பணிவுடைமையாகும். ஆராய்ந்து பார்க்கும்போது தம்மைச் சார்ந்தவரின் வறுமைத் துன்பத்தைப் போக்குவாராயின் செல்வம் உடையவரும்; செல்வரே ஆவர். (பெரியோர் பணிவுடைமையும், அடக்கமுடைமையும், ஈகைத் தன்மையும் உடையவராவர் என்பதும், ஆதலின் அவரைப் பிழைத்தல் தகாது என்பதும் கருத்தாகும்). 
கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும்.                   நாலடியார்  340
பொருள்: ஒருவன் கற்ற கல்வியையும், அவனது மேன்மையையும், நற்குடிப் பிறப்பையும் அயலார் பாராட்டிக் கூறினால் பெருமையாம். இவ்வாறின்றித் தன்னைத் தானே புகழ்ந்து கூறிக் கொள்வானாயின், அவனுக்கு மைத்துனர் (கேலி பேசுவோர்) பலராவர். மேலும் அவன் மருந்தாலும் தணியாத பித்தன் என்றும் இகழப்படுவான். (தற்புகழ்ச்சியும் பேதைமைத்தே என்பது கருத்து)

1 comment:

  1. Good Story.......I really enjoy this.....keep it up sir, the effort which you have take is highly appreciable.

    Srinivasan Gopal Rao http://www.blogger.com/profile/11498791168125017143

    ReplyDelete