Saturday 16 March 2013

NAALADIYAR STORY 20 உழைப்பு


20  உழைப்பு
ஒரு சோம்பேறி செல்வந்தன் இருந்தான். அவனுக்கு மூதாதையர் சம்பாதித்து வைத்த சொத்துக்கள் நிறைய இருந்தன. பல ஏக்கர் மாந்தோப்புகளும், தென்னந்தோப்புகளும் இருந்தன. அதிலிருந்த மரங்களெல்லாம் அவனது தாத்தாவால் நடப்பட்டு, வளர்க்கப் பட்டவை. இந்த மரங்களை பராமரிப்பதற்கு, ஒரு வேலைக்காரனை அமர்த்தியிருந்தான்.
அந்த வேலைக்காரன் சுறுசுறுப்பானவன்; ஒவ்வொரு நாளும், காலையில் தோப்பில், மரங்களின் கிளைகளை கழிப்பது, பாத்தி வெட்டுவது, நீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளை செய்து விட்டு, மதியம் எங்கோ சென்று விடுவான்.
அரை நாள் சம்பளமே வாங்கிக்கொள்வான். அந்தப் பாதி ஊதியத்திலேயே, ஒரு பற்றாக்குறை வாழ்க்கை வாழ்ந்தான். அவனது உறவினர்களும், உற்றார்களும் அவனை குறை கூறினர், பெரியவர்கள், “முதலாளிக்கு ஏற்ற சோம்பேறி தொழிலாளி என்று வைதார்கள். முதலாளியும் இதைக் கண்டு கொள்ள வில்லை. வேலைக்காரன் எப்பொழுதும் போல் மதிய நேரங்களில் எங்கேயோ சென்று விடுவான்.
இப்படியே, ஒரு ஏழு ஆண்டுகள் கழிந்தன. செல்வந்தனின் தோப்பிலிருந்த மரங்கள் வயதாகி பட்டு விட்டன. புதியதாக மரங்கள் நடப்படாததால், வருமானம் இல்லை. செல்வந்தன் வறியவனான். ஆனாலும் வேலைக்காரன் மட்டும் பழங்கள் கொண்டு வந்து விற்பனை செய்தான். கொஞ்சம், கொஞ்சமாக செல்வந்தனாகினான்.
அனைவருக்கும் வியப்பு, எவ்வாறு, எந்த மரங்களும் இல்லாத பொழுது, அவனுக்கு மட்டும் எங்கிருந்து பழங்கள் வருகின்றன என்று வியந்தனர்.
கடந்த ஏழு ஆண்டுகளாக, ஒரு முழுத் தோப்பினை உருவாக்கினேன். மதியம் வரை அன்றாடப் பிழைப்பிற்காக பழைய தோப்பினில் வேலை செய்து, பின் எனது தோப்பிற்கு வந்து கடினமாக உழைத்தேன். அதன் பலன்தான் இது என்றான்.
அவனது புத்திசாலித்தனத்தை அனைவரும் போற்றினர்.

கோளாற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல்
கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப;
வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
தாளாளர்க்கு உண்டோ தவறு?      நாலடியார்  191

பொருள்: குளத்தின் கீழ் உள்ள பயிர் நீரை மிகுதியாகக் கொள்ளாது; அது போல ஒரு முயற்சியுமின்றி தம் உறவினர் தருவதை உண்டு, அவ்வுறவினர் வறுமையுற்றால் சாவர். ஆனால், வாளின் மேல் கூத்தாடும் பெண்ணின் கண்ணைப்போல் சுறுசுறுப்பாக உழைப்பவருக்கு இத்தகைய பிழைபட்ட வாழ்வு உண்டாகுமோ?

Sunday 10 March 2013

Naaladiyaar story 22 ஆடா, மாடா?


ஆடா, மாடா?
STORY BY Engineerr/Lawyer.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM

ராமசாமி என்பவர் ஜல்லிக்கட்டு காளை ஒன்றினை வளர்த்து வந்தார்; மேலும் ஆடு ஒன்றையும் வளர்த்தார். நரி ஒன்று வழி தவறி ராமசாமி தோட்டத்திற்கு வந்துவிட்டது, நரி வளர்த்தால் அதிர்ஷ்டம் என்று யாரோ சொன்னதால், அதனையும் ராமசாமி தீனி போட்டு வளர்க்க ஆரம்பித்தார்.
ஒரு நாள், காளை பயிற்சி பெறும் பொழுது கீழே விழுந்ததால் அதன் கால் முறிந்து விட்டது. மருத்துவர் பலவித மருந்துகள் கொடுத்தும் பலனில்லை. சில நாட்கள் கழித்து, ஒரு அரிதான மருந்து ஒன்றினை கொணர்ந்து காளையின் காலுக்கு போட்டார். பிறகு, இந்த மருந்தும் வேலை செய்யவில்லையென்றால், அடிமாடாக விற்று விடுங்கள் என்று கூறினார்.
ராமசாமியும், மாடு சரியாகி விட்டால் உங்களுக்கு ஆடு வெட்டி விருந்து வைக்கிறேன், சரியாகா விட்டால் மாடுதான் விருந்து என்றார்.
ராமசாமி அவ்வாறு சொன்னதை ஆடும், நரியும் கேட்டு விட்டன. நரி, “ஆட்டினை பலமுறை சாப்பிட்டுள்ளோம், ஒரு முறை கூட மாட்டினை சாப்பிடவில்லை” என்று நினைத்தது. ஆடோ, தான் எப்படியும் ஒரு நாள் பிரியாணியாக வேண்டியதுதான், ஆனால் மாடு ஜல்லிக்கட்டில் சாதிக்க வேண்டியுள்ளது, அதனால் சாகக்கூடாது என்று நினைத்தது.
எனவே, மாட்டினை தொடர்ந்து உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தது. அந்த தொடர் ஆதரவினாலேயே, காளை குணமாகி எழுந்து நடக்க ஆரம்பித்தது. ராமசாமி வீட்டில் மகிழ்ச்சி. நரிக்கு சப்பென்றாகி விட்டது; இருந்தாலும் ஆட்டிறைச்சி கிடைக்கப் போவதை எண்ணி மகிழ்ந்தது.
மருத்துவர் கூறினார், “எப்பொழுதும் ஆடுதானா? ஒரு மாற்றத்திற்கு நரி இறைச்சி சமையுங்களேன்”.
யானை யானையவர் நண்பொரிஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.                         நாலடியார்  213  
பொருள்:யானை பலநாள் பழகியிருந்தும் சமயம் வாய்க்கும்போது பாகனையே கொல்லும்! ஆனால் நாயோ, தன்னை வளர்த்தவன் சினம் கொண்டு எறிந்த வேலானது தனது உடலில் அழுந்திக் கிடக்க, அவனைக் கண்டதும் வாலை ஆட்டி அவன் அருகே செல்லும். யானை போன்ற பெருமையுடையார் நட்பை விலக்கி, நாய் போன்ற இழிவுத் தன்மை உடையராயினும் அவரது நட்பை விரும்பிக் கொள்ளல் வேண்டும்.
கருத்து: கல்வி நலம், குல நலம் ஆகியவற்றை மட்டுமே கருதாமல், மனநலத்தையும் அறிந்து ஒருவரிடம் நட்புக்கொள்ள வேண்டும். அகன்ற கல்வியும், சிறந்த குடியும் இல்லையெனினும் மனம் தூயராயின் அவருடன் நட்புக் கொள்ளலாம்.

Saturday 2 March 2013

Naaladiyaar story 19 தூய மனது


STORY BY Engineerr/Lawyer.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM

19   தூய மனது
தரணேந்திரன் என்ற அரசன், தன் நாட்டினை செம்மையாக ஆண்டு வந்தான். ஒவ்வொரு வேலைக்கும் தகுந்த ஆட்களை தேர்ந்தெடுத்து அமர்த்தி இருந்ததால், அனைத்து வேலைகளும் செவ்வனே நடைபெற்றன. மக்கள் வளமாகவும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்தனர். தனக்கு வேண்டியவர், நண்பர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அரசாட்சி செய்தான்.
ஒருநாள் அரண்மனைப் பூங்காவில், சிறுவனான இளவரசன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, அவனது காலில் முள் குத்தி விட்டது.
இதைக் கேள்விப்பட்ட அரசிக்கு கோபம் வந்து, பூங்காவின் நிர்வாகியை அழைத்து, கன்னா பின்னாவென்று திட்டினாள். அப்படியும் அவளுக்கு கோபம் தீரவில்லை, தனது கணவனான அரசனிடம் புகார் செய்தாள். பூங்காவை  சரியாக பெருக்கி தூய்மையாக வைக்காததால், தங்களது ஆசை மகனின் காலில் முள் தைத்து விட்டது என்றாள்.
அவள் அவ்வாறு புகார் சொல்லும் பொழுது, அமைச்சரும் உடனிருந்தார். பூங்காவோ பெரியது, பெருக்குவது என்பது எளிதான ஒன்றல்ல, அப்படியே பெருக்கினாலும்,முள் போன்றவை திரும்பத் திரும்ப வந்து கொண்டேதானே இருக்கும்; ஆனாலும் புகாரளிப்பது அரசி, புண் பட்டிருப்பதோ அரசனின் செல்ல மகன், அதனால் பூங்கா நிர்வாகிக்கு பெரிய தண்டனை கிடைக்கும் என்று எண்ணினார்.
அரசன் மறுநாள் முடிவு சொல்வதாக கூறினான்.
மறுநாள், தனது மகனுக்கு செருப்பு ஒன்று வாங்கிக் கொடுத்தான்.

கடுக்கி ஒருவன் கடுங்குறளைப் பேசி
மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்க மிலாதவர் தூய மனத்தர்;
விளக்கினுள் ஒண்சுடரே போன்று.                     நாலடியார்    189
பொருள்: ஒருவன் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு பிறர்பற்றி மிகவும் பொல்லாத கோள் சொற்களைச் சொல்லித் தம் அறிவை மயங்கச் செய்தாலும், அப்பிறர்பால் சிறிதும் மனவேறுபாடின்றி அசைவில்லாது இருப்பவரே, விளக்கில் ஒளிரும் சுடர் போலத் தூய மனத்தவராவர்.
புறங்கூறலைப் பொருட்படுத்தாமையும் பெருமையாகும் என்பது கருத்து.