Saturday 16 March 2013

NAALADIYAR STORY 20 உழைப்பு


20  உழைப்பு
ஒரு சோம்பேறி செல்வந்தன் இருந்தான். அவனுக்கு மூதாதையர் சம்பாதித்து வைத்த சொத்துக்கள் நிறைய இருந்தன. பல ஏக்கர் மாந்தோப்புகளும், தென்னந்தோப்புகளும் இருந்தன. அதிலிருந்த மரங்களெல்லாம் அவனது தாத்தாவால் நடப்பட்டு, வளர்க்கப் பட்டவை. இந்த மரங்களை பராமரிப்பதற்கு, ஒரு வேலைக்காரனை அமர்த்தியிருந்தான்.
அந்த வேலைக்காரன் சுறுசுறுப்பானவன்; ஒவ்வொரு நாளும், காலையில் தோப்பில், மரங்களின் கிளைகளை கழிப்பது, பாத்தி வெட்டுவது, நீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளை செய்து விட்டு, மதியம் எங்கோ சென்று விடுவான்.
அரை நாள் சம்பளமே வாங்கிக்கொள்வான். அந்தப் பாதி ஊதியத்திலேயே, ஒரு பற்றாக்குறை வாழ்க்கை வாழ்ந்தான். அவனது உறவினர்களும், உற்றார்களும் அவனை குறை கூறினர், பெரியவர்கள், “முதலாளிக்கு ஏற்ற சோம்பேறி தொழிலாளி என்று வைதார்கள். முதலாளியும் இதைக் கண்டு கொள்ள வில்லை. வேலைக்காரன் எப்பொழுதும் போல் மதிய நேரங்களில் எங்கேயோ சென்று விடுவான்.
இப்படியே, ஒரு ஏழு ஆண்டுகள் கழிந்தன. செல்வந்தனின் தோப்பிலிருந்த மரங்கள் வயதாகி பட்டு விட்டன. புதியதாக மரங்கள் நடப்படாததால், வருமானம் இல்லை. செல்வந்தன் வறியவனான். ஆனாலும் வேலைக்காரன் மட்டும் பழங்கள் கொண்டு வந்து விற்பனை செய்தான். கொஞ்சம், கொஞ்சமாக செல்வந்தனாகினான்.
அனைவருக்கும் வியப்பு, எவ்வாறு, எந்த மரங்களும் இல்லாத பொழுது, அவனுக்கு மட்டும் எங்கிருந்து பழங்கள் வருகின்றன என்று வியந்தனர்.
கடந்த ஏழு ஆண்டுகளாக, ஒரு முழுத் தோப்பினை உருவாக்கினேன். மதியம் வரை அன்றாடப் பிழைப்பிற்காக பழைய தோப்பினில் வேலை செய்து, பின் எனது தோப்பிற்கு வந்து கடினமாக உழைத்தேன். அதன் பலன்தான் இது என்றான்.
அவனது புத்திசாலித்தனத்தை அனைவரும் போற்றினர்.

கோளாற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல்
கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப;
வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
தாளாளர்க்கு உண்டோ தவறு?      நாலடியார்  191

பொருள்: குளத்தின் கீழ் உள்ள பயிர் நீரை மிகுதியாகக் கொள்ளாது; அது போல ஒரு முயற்சியுமின்றி தம் உறவினர் தருவதை உண்டு, அவ்வுறவினர் வறுமையுற்றால் சாவர். ஆனால், வாளின் மேல் கூத்தாடும் பெண்ணின் கண்ணைப்போல் சுறுசுறுப்பாக உழைப்பவருக்கு இத்தகைய பிழைபட்ட வாழ்வு உண்டாகுமோ?

3 comments:

  1. GOOD STORY, GOOD MORAL.
    G.Ravi kumar

    ReplyDelete
  2. What a Fantastic message by this story.
    I really admire these stories.

    Why these stories are not published in magazines!?
    Sudharsana Sukumar

    ReplyDelete