Sunday 10 March 2013

Naaladiyaar story 22 ஆடா, மாடா?


ஆடா, மாடா?
STORY BY Engineerr/Lawyer.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM

ராமசாமி என்பவர் ஜல்லிக்கட்டு காளை ஒன்றினை வளர்த்து வந்தார்; மேலும் ஆடு ஒன்றையும் வளர்த்தார். நரி ஒன்று வழி தவறி ராமசாமி தோட்டத்திற்கு வந்துவிட்டது, நரி வளர்த்தால் அதிர்ஷ்டம் என்று யாரோ சொன்னதால், அதனையும் ராமசாமி தீனி போட்டு வளர்க்க ஆரம்பித்தார்.
ஒரு நாள், காளை பயிற்சி பெறும் பொழுது கீழே விழுந்ததால் அதன் கால் முறிந்து விட்டது. மருத்துவர் பலவித மருந்துகள் கொடுத்தும் பலனில்லை. சில நாட்கள் கழித்து, ஒரு அரிதான மருந்து ஒன்றினை கொணர்ந்து காளையின் காலுக்கு போட்டார். பிறகு, இந்த மருந்தும் வேலை செய்யவில்லையென்றால், அடிமாடாக விற்று விடுங்கள் என்று கூறினார்.
ராமசாமியும், மாடு சரியாகி விட்டால் உங்களுக்கு ஆடு வெட்டி விருந்து வைக்கிறேன், சரியாகா விட்டால் மாடுதான் விருந்து என்றார்.
ராமசாமி அவ்வாறு சொன்னதை ஆடும், நரியும் கேட்டு விட்டன. நரி, “ஆட்டினை பலமுறை சாப்பிட்டுள்ளோம், ஒரு முறை கூட மாட்டினை சாப்பிடவில்லை” என்று நினைத்தது. ஆடோ, தான் எப்படியும் ஒரு நாள் பிரியாணியாக வேண்டியதுதான், ஆனால் மாடு ஜல்லிக்கட்டில் சாதிக்க வேண்டியுள்ளது, அதனால் சாகக்கூடாது என்று நினைத்தது.
எனவே, மாட்டினை தொடர்ந்து உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தது. அந்த தொடர் ஆதரவினாலேயே, காளை குணமாகி எழுந்து நடக்க ஆரம்பித்தது. ராமசாமி வீட்டில் மகிழ்ச்சி. நரிக்கு சப்பென்றாகி விட்டது; இருந்தாலும் ஆட்டிறைச்சி கிடைக்கப் போவதை எண்ணி மகிழ்ந்தது.
மருத்துவர் கூறினார், “எப்பொழுதும் ஆடுதானா? ஒரு மாற்றத்திற்கு நரி இறைச்சி சமையுங்களேன்”.
யானை யானையவர் நண்பொரிஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.                         நாலடியார்  213  
பொருள்:யானை பலநாள் பழகியிருந்தும் சமயம் வாய்க்கும்போது பாகனையே கொல்லும்! ஆனால் நாயோ, தன்னை வளர்த்தவன் சினம் கொண்டு எறிந்த வேலானது தனது உடலில் அழுந்திக் கிடக்க, அவனைக் கண்டதும் வாலை ஆட்டி அவன் அருகே செல்லும். யானை போன்ற பெருமையுடையார் நட்பை விலக்கி, நாய் போன்ற இழிவுத் தன்மை உடையராயினும் அவரது நட்பை விரும்பிக் கொள்ளல் வேண்டும்.
கருத்து: கல்வி நலம், குல நலம் ஆகியவற்றை மட்டுமே கருதாமல், மனநலத்தையும் அறிந்து ஒருவரிடம் நட்புக்கொள்ள வேண்டும். அகன்ற கல்வியும், சிறந்த குடியும் இல்லையெனினும் மனம் தூயராயின் அவருடன் நட்புக் கொள்ளலாம்.

1 comment:

  1. Good Moral;
    Actually this is tough to understand and realise, but this has been explained in simple language and with known matters.

    ReplyDelete