Sunday 28 April 2013

நாலடியார் நீதிக்கதை வெளிநாட்டு மோகம்


21 வெளி நாட்டு மோகம்
 STORY BY Engineer/Lawyer.A.SRI VIJAYAN
NAALADIYAAR" POEM BY JAIN SAINTS
EXPLANATION TO THE POEM BY Prof.J.SRI CHANDRAN 

நந்தன் என்பவன் எப்பொழுதும் வெளிநாட்டு மோகம் கொண்டவன். வெளிநாட்டு சட்டை, காலணி, கடிகாரம், தொலைக்காட்சிப் பெட்டி, செல்லிடப்பேசி என்று எது வாங்கினாலும் வெளிநாட்டுப் பொருட்கள்தான் வாங்குவான்.
அவனுடைய நண்பர்கள், அவற்றையெல்லாம் வாங்கவேண்டாம் என்று அறிவுறுத்தினாலும் கேட்கமாட்டான். இந்தியத் தயாரிப்புகள் அற்பமானது என்று கூறுவான். வெளிநாட்டுத் தயாரிப்புகளைப் பயன் படுத்தினால்தான் ஒரு மரியாதை, அவை வீட்டில் இருந்தாலே ஒரு தனி பெருமை என்று கூறுவான்.

ஒருநாள் சீனாவில் செய்யப்பட்ட நீர் சூடேற்றி (water heater) ஒன்றினை வாங்கி வந்தான். நண்பன் ஒருவன், இதில் இந்தியத் தர முத்திரை இல்லை; அதனால் வாங்காதே என்றான். நந்தனோ, உனது ISI எல்லாம் இந்தியாவுக்குத்தான், சீனாவுக்கு அல்ல என்று நண்பனைத் தவிர்த்தான்.
நண்பனோ, “அப்படி கூறாதே. ISI என்பது, தரம் மட்டுமல்ல, பாதுகாப்பு மற்றும் நீடித்த் உழைப்பு போன்றவற்றையும் சான்றளிக்கிறது. நீ வாங்கியுள்ளது தரம் குறைந்தது மட்டுமல்ல, பாதுகாப்பற்றது என்று கூறினான். இருந்தாலும், நந்தன் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
இரு நாட்களில், நந்தன் சீனத் தயாரிப்பால், மின்சாரம் பாய்ந்து, குளியல் அறையிலேயே இறந்து போனான்.
நாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து
வேளாண்மை வெங்கருணை வேம்பாகும்; - கேளாய்,
அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனும்
தமராயார் மாட்டே இனிது.               நாலடியார் 207

பொருள்: நெஞ்சமே, கேள்! பகைவர் இல்லத்தில் வேளை தவறாமல் பொரிக்கறியுடன் கூடிய உணவினை உதவியாகப் பெற்றாலும் அது, வேம்புக்கு நிகராகும், உணவுக்குரிய நேரம் கடந்தபோதும், சுற்றத்தாரிடமிருந்து கீரை உணவே கிடைத்தாலும் அ·து இனிமையாகும்

Sunday 21 April 2013

Thirukkural / Arunkalacheppu Moral Story கடவுள் கேட்ட உயிர் பலி!?


For a change, This week Thirukkural and Arunkalacheppu based Moral Story is published

கடவுள் கேட்ட உயிர் பலி!?

STORY BY Engineer/Lawyer.A.SRI VIJAYAN
மேகதூதன் என்கிற வணிகன் ஏலாலவூர் என்ற சிற்றூரில் வாழ்ந்தான். தனது ஊரில் விளையும் பொருட்களை அருகிலுள்ள பேரூர்களில் விற்பது, அங்கே கிடைக்கும் பொருட்களை தனது வட்டார சிற்றூர்களில் விற்பது என்று நல்ல பொருள் ஈட்டி வந்தான். ஆனால் அற வழியில் செலவு தனது வணிகத்திற்கு விளம்பரம் தரும் என்றால் மட்டுமே அவ்வழியில் செலவு செய்வான்.
ஒருநாள், தீராத வயிற்றுவலியால் துன்பப்பட்ட அவன் மருத்துவரிடம் சென்றான். அவரோ, “வயிற்றில் முற்றிய நிலையில் கட்டி ஒன்று உள்ளது. மூன்று திங்கள் மருந்து, மாத்திரைகள் கொடுத்துப் பார்ப்போம். சரியாகவில்லையென்றால், அறுவை மருத்துவம் (Surgical Operation) செய்ய வேண்டும்; என்றார்.
அறுவை மருத்துவத்தாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை எனவே மருந்து மாத்திரைகளிலேயே குணமடைந்து, நலமடைய வேண்டுமென்று கடவுளை வேண்டிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
மேகதூதனும் அவனது மனைவியும், நோய் நீங்கிவிட்டால் மூன்று திங்கள் கழித்து கடவுளுக்கு ஆடுவெட்டி பொங்கல் படைப்பதாய் நேர்ந்து கொண்டனர்.
அன்றிரவு அவனது கனவில் இரு ஆடுகள் கடவுள் முன் மண்டியிட்டிருப்பது போல தோன்றின. மறுநாள் இந்தக் கனவின் பொருள் என்னவாக இருக்கும் என மனைவியிடம் வினவ, அவளும் நேர்த்திக் கடனை மூன்று திங்கள் தள்ளிப் போட வேண்டாம், இப்பொழுதே செய்துவிடு என்று கடவுள் கேட்பதாக கூறினாள்.
அதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த அவன், அதனை தெய்வ ஆணையாக எண்ணி உடனே இரண்டு ஆடுகளை பலியிட்டு சிறப்பாகக் கொண்டாடினான். கடவுளின் அருளாலும், ஆதரவாலும் தான் பிழைத்து விடுவேன் என்று நம்பி மகிழ்ச்சியோடு இருந்தான். வேளாவேளைக்கு மருந்து உட்கொள்ள வேண்டும் என்பதையும் மறந்தான்.
மூன்று திங்கள் கழித்து, ரத்த சோதனை செய்ததில், நோய் குணமாகாமல், தீவிரமடைந்தது தெரிந்தது. மேகதூதனுக்கு கவலையும் சினமும் கலந்த ஒரு உணர்வு பெருகியது. கடவுளைத் திட்டி தீர்த்தான்.

அன்றிரவு, கனவில் மீண்டும் கடவுள் வந்தார். “இது நியாயமா? நீ கேட்டது போலவே ஆடுகளை பலி கொடுத்தேனே! இப்படி நம்பிக்கை துரோகம் செய்யலாமா? என்று வினவினான்.
கடவுளும், “நான் எங்கே பலி கேட்டேன். எனக்கு நீயும் குழந்தைதான், ஆடும் குழந்தைதான். அன்று கனவில் உன்னைப் போலவே இந்த ஆடுகளும் தங்களைக் காப்பாற்றும் படி வேண்டுகின்றன. எனவே, உன் பலி கொடுக்கும் எண்ணத்தை கைவிடு என்பதாக பொருள். அது புரியாமல், நான் பலி கேட்பதாக உடனடியாக பலி கொடுத்து விட்டாய் என்றார்.
தான் எப்பொழுதுமே பலி கேட்பதில்லை என்பதை நீயும் புரிந்து கொண்டு உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் கூறு என்றார் கடவுள்.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. (குறள் 327)
பொருள்: தன்னுயிரே போவதாக இருப்பினும் கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது

வாழ்விப்பர் தேவர் எனமயங்கி வாழ்த்துதல்
பாழ்பட்ட தெய்வ மயக்கு   (அருங்கலச் செப்பு -  31)


பொருள்: தெய்வங்கள் தனது ஞாயமற்ற அவாக்களை, தேவைகளை தீர்த்து வைக்கும் என்று எண்ணி, அவைகளுக்கு பூஜை செய்வது தெய்வத்தைப் பற்றிய மூட நம்பிக்கையாகும்

Saturday 13 April 2013

Naladiyar Moral Story 28 புண்ணாக்குக்கு பூஜை


28 புண்ணாக்குக்கு பூஜை
 STORY BY Engineer/Lawyer.A.SRI VIJAYAN
NAALADIYAAR" POEM BY JAIN SAINTS
EXPLANATION TO THE POEM BY Prof.J.SRI CHANDRAN 
இந்திரன், மகேந்திரன் என்று இரு நண்பர்கள். இந்திரன் கொடையாளி, மகேந்திரன் உலோபி.
இந்திரன் தன்னை அண்டியவர்களுக்கு தேவையான் பொருள் உதவியும், பண உதவியும் தந்துதவுவான். மகேந்திரனோ தன்னிடம் உள்ள பணத்தையெல்லாம் ஒரு மூட்டையில் கட்டி, அதற்கு தினமும் பூஜை செய்து வணங்குவான். அதனை ஒரு நாளும் அவிழ்க்க மாட்டான், யாருக்கும் தரவும் மாட்டான்.
ஒருநாள் அந்தப் பணமூட்டை திருடு போய் விட்டது. மகேந்திரனுக்கு மிகுந்த கவலையாகி விட்டது.. தன்னால் இனிமேல் அவ்வளவு பணத்தை சம்பாதிக்க முடியாது, தனது வாழ்க்கை முடிந்து விட்டதாக எண்ணினான்.
அப்பொழுது இந்திரன், மகேந்திரனை கவலைப்பட வேண்டாமென்றும், உண்மையில் அவனது பணத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே அவனது மனைவி தன்னிடம் கொடுத்து வர்த்தகத்தில் முதலீடு செய்யுமாறு சொன்னார் என்றும் கூறினான்.
தான் அவ்வாறே செய்து, வந்த லாபத்தில் ஒரு பங்கினைத் தானமாக கொடுத்து, மீதமுள்ள பணத்தை தான் வைத்துள்ளதாகவும், அந்தப்பணம், முதலீடு செய்ததை விட அதிகமானது என்றும் கூறினான்.
மகேந்திரனுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியென்றாலும், மறுபக்கம் குழப்பம். அப்படியென்றால், “நான் இதுவரை பூஜை செய்து வந்த மூட்டைக்குள் இருந்தது என்ன?” என்று கேட்டான்.
“அது வெறும் புண்ணாக்கு மூட்டை” என்றான் இந்திரன்



ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல்
குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள்.            நாலடியார் 280
பொருள்: பொருளைத் தேடுவதும் துன்பம்; தேடிய பொருளைக் காத்தலும் அவ்வாறே மிகுந்த துன்பம்; காக்கப்படும் பொருளில் சிறிது குறைந்தாலும் துன்பம்; அப்பொருள் முழுதும் அழிந்தால் மிகப் பெரும் துன்பம். ஆதலால் அந்தப் பொருள் துன்பத்துக்கெல்லாம் இருப்பிடமாகும்.
பொருள் துன்பத்திற்குக் காரணமாக இருப்பதை அறிந்து, அதனை இன்பத்திற்கு உரியதாகச்செய்தல் வேண்டும் என்பது கருத்து

Saturday 6 April 2013

Naaladiyaar based Moral Story 25 வென்றது யார்?


25 வென்றது யார்?
Story is based on moral advocated by Naladiyar

STORY BY Engineer/Lawyer.A.SRI VIJAYAN
NAALADIYAAR" POEM BY JAIN SAINTS
EXPLANATION TO THE POEM BY Prof.J.SRI CHANDRAN 

சௌதர்மேந்திரனும் கமடனும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள், நன்றாகப் படிப்பவர்கள்.
பள்ளியில் முழு ஆண்டுத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இருவரும் மிதி வண்டியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது, முரடன் ஒருவன் எதிரில் வந்து சௌதர்மேந்திரன் மீது மோதிவிட்டான். அதனால், சௌதர்மேந்திரன் கீழே விழுந்து விட்டான்.
உடனே, கமடன் அந்த முரடனைப் பிடித்துக் கொண்டு திட்டினான். சௌதர்மேந்திரனோ, “பரவாயில்லை, அவனை விட்டுவிடு, நாம் பள்ளிக்கு செல்வோம்” என்றான். கமடனோ விடுவதாயில்லை. முரடன் மன்னிப்பு கேட்கும் வரை விடுவதாயில்லை என்று அடம் பிடித்தான்.
சௌதர்மேந்திரனோ தேர்வு எழுதும் நேரம் நெருங்குவதால், சண்டையை விடுத்து வருமாறு வற்புறுத்தினான். முரடனோ மன்னிப்பு கேட்பதாயில்லை. கமடனோ விடுவதாயில்லை. “நீ வேண்டுமானால் பள்ளிக்கு செல், இவனை நான் விட்டுவிட்டால் தோற்றவனாகி விடுவேன்” என்று கமடன் சொன்னான்.
சௌதர்மேந்திரனும் வேறு வழியின்றி பள்ளிக்கு சென்றான்.
முரனும் சிறிது நேரம் கழித்து முரடன் மன்னிப்பு கேட்டதால், வெற்றிக் களிப்புடன், கமடன் பள்ளிக்கு வந்தான். அங்கே நேரம் கடந்துவிட்டதால் தேர்வு எழுத அனுமதிக்கப் படவில்லை.
இப்பொழுது வென்றது யார்?
நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.     நாலடியார் 248
நல்ல நிலையிலே தன்னை நிறுத்திக்கொள்பவனும், அந்த நிலையைக் கெடுத்துத் தன்னைத் தாழ்ந்த நிலையில் சேர்க்கின்றவனும், இருக்கும் நிலையைவிட மிகவும் மேலான நிலையிலே தன்னை உயர்த்திக்கொள்பவனும், தன்னைத் தலைமையுடையவனாகச் செய்து கொள்பவனும் தானே ஆவான். (ஒருவனது உயர்வு தாழ்வு அவனது அறிவினாலேயே உண்டாகும் என்பது கருத்து). தீதும் நன்றும் பிறர்தர வாரா.
கரும வரிசையால் கல்லாதார் பின்னும்
பெருமை யுடையாரும் சேறல் - அருமரபின்
ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப!
பேதைமை யன்றுஅது அறிவு.      நாலடியார் 249
அருமையாக ஒரே சீரான முறைப்படி அலைகள் ஆரவாரம் செய்யும் குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டுக்கு வேந்தனே! சமுதாயத்திற்குப் பயன்தரத்தக்க ஒரு நல்ல காரியம் முறைப்படி இனிதே நிறைவேறும் பொருட்டு, பெருமை யுடையோரும் அறிவில்லார் பின் செல்வது அறியாமையன்று; ·து அறிவுடைமையே! (கல்லாதாருடன் ஒரு நல்ல காரியத்தின் காரணமாகக் கலந்து வாழ்தல் அறிவுடைமையாகும் என்பது கருத்து).