Sunday 21 April 2013

Thirukkural / Arunkalacheppu Moral Story கடவுள் கேட்ட உயிர் பலி!?


For a change, This week Thirukkural and Arunkalacheppu based Moral Story is published

கடவுள் கேட்ட உயிர் பலி!?

STORY BY Engineer/Lawyer.A.SRI VIJAYAN
மேகதூதன் என்கிற வணிகன் ஏலாலவூர் என்ற சிற்றூரில் வாழ்ந்தான். தனது ஊரில் விளையும் பொருட்களை அருகிலுள்ள பேரூர்களில் விற்பது, அங்கே கிடைக்கும் பொருட்களை தனது வட்டார சிற்றூர்களில் விற்பது என்று நல்ல பொருள் ஈட்டி வந்தான். ஆனால் அற வழியில் செலவு தனது வணிகத்திற்கு விளம்பரம் தரும் என்றால் மட்டுமே அவ்வழியில் செலவு செய்வான்.
ஒருநாள், தீராத வயிற்றுவலியால் துன்பப்பட்ட அவன் மருத்துவரிடம் சென்றான். அவரோ, “வயிற்றில் முற்றிய நிலையில் கட்டி ஒன்று உள்ளது. மூன்று திங்கள் மருந்து, மாத்திரைகள் கொடுத்துப் பார்ப்போம். சரியாகவில்லையென்றால், அறுவை மருத்துவம் (Surgical Operation) செய்ய வேண்டும்; என்றார்.
அறுவை மருத்துவத்தாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை எனவே மருந்து மாத்திரைகளிலேயே குணமடைந்து, நலமடைய வேண்டுமென்று கடவுளை வேண்டிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
மேகதூதனும் அவனது மனைவியும், நோய் நீங்கிவிட்டால் மூன்று திங்கள் கழித்து கடவுளுக்கு ஆடுவெட்டி பொங்கல் படைப்பதாய் நேர்ந்து கொண்டனர்.
அன்றிரவு அவனது கனவில் இரு ஆடுகள் கடவுள் முன் மண்டியிட்டிருப்பது போல தோன்றின. மறுநாள் இந்தக் கனவின் பொருள் என்னவாக இருக்கும் என மனைவியிடம் வினவ, அவளும் நேர்த்திக் கடனை மூன்று திங்கள் தள்ளிப் போட வேண்டாம், இப்பொழுதே செய்துவிடு என்று கடவுள் கேட்பதாக கூறினாள்.
அதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த அவன், அதனை தெய்வ ஆணையாக எண்ணி உடனே இரண்டு ஆடுகளை பலியிட்டு சிறப்பாகக் கொண்டாடினான். கடவுளின் அருளாலும், ஆதரவாலும் தான் பிழைத்து விடுவேன் என்று நம்பி மகிழ்ச்சியோடு இருந்தான். வேளாவேளைக்கு மருந்து உட்கொள்ள வேண்டும் என்பதையும் மறந்தான்.
மூன்று திங்கள் கழித்து, ரத்த சோதனை செய்ததில், நோய் குணமாகாமல், தீவிரமடைந்தது தெரிந்தது. மேகதூதனுக்கு கவலையும் சினமும் கலந்த ஒரு உணர்வு பெருகியது. கடவுளைத் திட்டி தீர்த்தான்.

அன்றிரவு, கனவில் மீண்டும் கடவுள் வந்தார். “இது நியாயமா? நீ கேட்டது போலவே ஆடுகளை பலி கொடுத்தேனே! இப்படி நம்பிக்கை துரோகம் செய்யலாமா? என்று வினவினான்.
கடவுளும், “நான் எங்கே பலி கேட்டேன். எனக்கு நீயும் குழந்தைதான், ஆடும் குழந்தைதான். அன்று கனவில் உன்னைப் போலவே இந்த ஆடுகளும் தங்களைக் காப்பாற்றும் படி வேண்டுகின்றன. எனவே, உன் பலி கொடுக்கும் எண்ணத்தை கைவிடு என்பதாக பொருள். அது புரியாமல், நான் பலி கேட்பதாக உடனடியாக பலி கொடுத்து விட்டாய் என்றார்.
தான் எப்பொழுதுமே பலி கேட்பதில்லை என்பதை நீயும் புரிந்து கொண்டு உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் கூறு என்றார் கடவுள்.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. (குறள் 327)
பொருள்: தன்னுயிரே போவதாக இருப்பினும் கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது

வாழ்விப்பர் தேவர் எனமயங்கி வாழ்த்துதல்
பாழ்பட்ட தெய்வ மயக்கு   (அருங்கலச் செப்பு -  31)


பொருள்: தெய்வங்கள் தனது ஞாயமற்ற அவாக்களை, தேவைகளை தீர்த்து வைக்கும் என்று எண்ணி, அவைகளுக்கு பூஜை செய்வது தெய்வத்தைப் பற்றிய மூட நம்பிக்கையாகும்

3 comments:

  1. அருமையான கதை.
    தெய்வ நம்பிக்கை வேண்டும், ஆனால் அது மூட நம்பிக்கையாக இருக்க கூடாது என்பதனை விளக்கும் கதை.
    நன்று.
    சுரேந்திர நாதன்.

    ReplyDelete
  2. It is really Nice and Impressive.
    All the youngsters must read it.

    ReplyDelete