Sunday 11 November 2012

Naaladiyar Based Moral Story-7


றந்தும் வாழ்பவர்கள்

ஒரு ஊரில், வீரசேனன் என்கிற செல்வந்தர் வாழ்ந்து வந்தார், செல்வந்தரென்றாலும் கஞ்சர். எச்சில் கையால் காக்கை ஓட்டாத மனிதர் என்று சொல்வார்களே அதைப் போன்றவர்.
அவர் தினமும் தனது கஜானாவில் (கருவூலத்தில்) சேர்ந்துள்ள காசு, பணம், நகை மூட்டைகளை கணக்கிட்டு வைத்துக் கொள்வார்.
அதே ஊரில், ஜெயசேனன் என்பரும் வாழ்ந்தார். அவர் ஒன்றும் செல்வந்தர் இல்லை. ஆனாலும் தனக்கு கிடைக்கும் திரவியத்தைக் கொண்டு, தானும் சிக்கனமாக செலவு செய்து பிறருக்கும் தேவையானவற்றை தானமாகத் தருவார்.
கோடைக்காலங்களில் வழிப் போக்கர்களுக்கு உதவும் வகையில் தண்ணீர் பந்தல் அமைப்பார் ஜெயசேனன். அதற்கு தண்ணீர் கொண்டு வர வேலையாள் ஒருவரையும் அமர்த்தி, அவருக்கு சம்பளமும் கொடுத்தார்.
“ஏன், நீ சம்பாதித்த பணத்தையெல்லாம் இவ்வாறு வீணடிக்கிறாய், தண்ணீர் குடித்த எவரும் உனக்கு எவ்விதத்திலும் உதவ மாட்டார்கள்” என்று செல்வந்தரான வீரசேனன், ஜெயசேனனுக்கு அறிவுரை கூறினார்.
இந்த அறிவுரையைப் பொருட்படுத்தாது, ஜெயசேனன் தொடர்ந்து அறப்பணிகளில் தனது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை செலவழித்தார்.
ஒருநாள், வழக்கம் போல வீரசேனன் தனது கருவூலத்தில் நகை, பண இருப்புகளை சரிபார்க்கும் பொழுது ஒரு மூட்டை பணம் குறைவதாக தோன்றியது. உடனே, அவருக்கு வியர்த்தது, பேச்சு வரவில்லை. சிறிது நேரத்தில் நெஞ்சு வலி வந்து இறந்து போனார்.
வீரசேனன் இறந்ததை கேள்விப் பட்டு, ஜெயசேனன் வருத்தப்பட்டார். பிறகு, தண்ணீர் பந்தலுக்கு நிரந்தர கட்டிடம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். அது போதாதென்று நினைத்தவர், அங்கே ஒரு கிணறு ஒன்றினையும் ஏற்படுத்தினார். இதனால், நிரந்தரமாக எப்பொழுதும் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வழி கிடைத்தது.
அப்பொழுது, தண்ணீர் பந்தலுக்கு தினமும் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றிய நபர், “ஏனிப்படி செய்தீர்கள், எனக்கு இனி வேலையில்லையே! நான் என்ன செய்வேன்” என்று கேட்டார்.
அதற்கு ஜெயசேனன், “நிறைய பணம் வைத்திருந்த வீரசேனன் யாருக்கும் தராமல் பணத்தை அப்படியே விட்டு விட்டு இறந்து போனான், புல் நுனியிலுள்ள நீர்த்துளி போன்று நிலையில்லாத் தன்மையுடையது இந்த வாழ்க்கை; அது போல் நானும் இறந்து போனால், இந்தத் தண்ணீர் பந்தல் இல்லாது போகும், அதற்காகவே எனது இறப்பினாலும் பாதிக்கப் படாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாட்டினை செய்தேன். கவலைப் படாதே, இந்தக் கட்டிடத்தையும், கிணற்றையும் நிர்வகிக்கவும் பராமரிக்கவும் உன்னை அமர்த்துகிறேன்” என்றார்.
உணர்ச்சிப் பெருக்கிட்ட அந்த வேலையாள், “அய்யா, உங்களுக்கு மறைவே இல்லை. நீங்கள் இறந்தபின்னும் வாழ்வீர்கள்” என்று வாழ்த்தினான்.

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை; - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்            நாலடியார் – 29


விளக்கம்: ஒருவன் இப்பொழுது நின்று கொண்டிருந்தான்; உட்கார்ந்தான்; படுத்தான்; தன் உறவினர் அலறி அழ இறந்தான் என்று கூறப்படுவதால், புல் நுனியிலிருக்கும் நீர்த்துளியைப் போல நிலையில்லாத தன்மையுடையது இந்த உடம்பு என்று எண்ணி, இப்பொழுதே அறவினைகளைச் செய்க

Naladiyar is the collection of poems (400 in numbers) created by Jain monks. This naladiyar is made simple by these stories.

No comments:

Post a Comment