Tuesday 30 October 2012

NALADIYAR BASED MORAL STORY-6


அறிவார்ந்தவர் யார்?


அன்று சித்திரை மாதம் அக்ஷய திருதியை, பகவான் ஆதீஸ்வரர் வீதி உலா வந்து கருப்பஞ்சாறு அருந்தும் வைபவம். ஆதீஸ்வரர் ஆலயத்தில், சப்பரம் என்னும் சிறு தேரினை தயார் செய்து வைத்திருந்தனர். சப்பரத்தினை இழுத்துச் செல்ல ரிஷபம் (காளை) தயாராய் இருந்தது.
கோவில் இருந்த தெருவில் ஒரு முனையில் காவேரி ஆற்றின் கிளையாறு ஓடியது, ஆற்றங்கரையில் பன்றி ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அங்கே வந்த ஒரு நாய், அந்தப் பன்றியைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே துரத்தியது.
நாயைப் பார்த்த பன்றி, சிறிதும் பயப்படாமல், “ஏய், நாயே! சும்மா குரைக்காதே! உன் வழியில் செல், நான் யாரென்று உனக்குத் தெரியாது” என்றது.
அதற்கு நாய், “ஏய், நீ யாரென்று யாருக்குத்தான் தெரியாது, இன்னும் சற்று நேரத்தில், ஊர்வலம் இந்த வழியாக வரப்போகிறது, இங்கே நில்லாது ஓடிப்போய் விடு” என்றது.
பன்றியும் சளைக்காமல், “நாயே, ஊர்வலத்தில் சப்பர பட்டறையை இழுக்கும் காளை மாடு கூட என்னைக் கண்டு பயந்து ஓடும், நீயோ சிறு நாய், இங்கிருந்து செல்” என்றது.
நாயோ, குழப்பம் அடைந்து, “நீ சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது, இங்கிருந்து ஓடிவிடு” என்றது.
பன்றி, “நீ நம்பவில்லை என்றால் என் கூடவே வா” என்றது.
நாயும் ஒன்றும் புரியாமல், பன்றியின் பின்னாலே செல்ல ஆரம்பித்தது. கோவில் வாசலில் நின்றிருந்த காளை, பன்றி அந்த வழியே செல்லும் பொழுது, ஒதுங்கி வழிவிட்டு நின்றது.
பன்றியோ செல்ல வழியிருந்தாலும் காளைக்கு அருகாமையிலேயே கோவிலின் வாசலைக் கடந்தது. காளையும் தன்னை ஒடுக்கிக் கொண்டு வழி கொடுத்தது.
காளை ஏன் இப்படி பன்றிக்கு பயப்படுகிறது என்று நாய்க்குப் புரியவில்லை, பன்றியை தொடருவதை விட்டு விட்டு, காளையிடம் காரணத்தை வினவியது.
காளையோ, “நான் ஆதிபகவனின் ரிஷப வாஹனம், சப்பரத்தை இழுப்பதற்காக குளித்து சுத்தமாக வந்துள்ளேன். பன்றியோ சேற்றிலும் சகதியிலும் விழுந்து புரண்டு அழுக்காக உள்ளது, அது என்னைத் தொட்டு விட்டால் நான் மீண்டும் குளிக்க வேண்டும், அதனால் வீதி உலா தாமதமாகும், அதைத் தடுக்கவே பன்றிக்கு வழி விட்டேன்” என்றது.
அப்பொழுதுதான் நாய்க்கு, காளையின் செயலுக்கும் பன்றியின் அறிவீனத்திற்கும் காரணம் புரிந்தது.

மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டாங்கோர்
அஞ்ஞானம் தந்திட்டு அதுவாங்கு அறத்துழாய்க்
கைஞ்ஞானம் கொண்டொழுகும் காரறி வாளர்முன்
சொன்ஞானம் சோர விடல்                        நாலடியார் 311

விளக்கம்: ஞான நூல்களை அறிந்தோர் அவையில் சேர்ந்து ஒன்றைத் தெரிந்துகொள்வதை விட்டு, அங்கே ஓர் அறிவற்ற பேச்சைப் பன்னிப் பன்னிப் பேசி அதையே நிலைநாட்ட முற்படும் சிற்றறிவாளர் முன்னிலையில், தமது அறிவார்ந்த சொல்லைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக

No comments:

Post a Comment