Tuesday 9 October 2012

NAALADIYAAR BASED MORAL STORY-1


1.செல்வம் நிலையாமை
STORY BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"
STORY BY Engr.A.SRI VIJAYAN
EXPLANATION TO POEM BY Prof.J.SRI CHANDRAN
ஒரு ஊரில் முத்து என்கிற ஆண்டி ஒருவன் வாழ்ந்தான். அவனுக்கு ஒரு மகன். தன் மகனை மிகவும் செல்லமாக முத்து வளர்த்தான்.
தன் மகன் கேட்ட உணவுகளையெல்லாம், பிச்சையெடுத்தாவது வாங்கி வந்து கொடுத்து விடுவான் முத்து. அவனை ஒரு ராஜா வீட்டு பிள்ளை என்று அடிக்கடி கொஞ்சி மகிழ்வான்.
"மகனே, ராஜா, நீ பின்னாளில் பெரிய மனிதனாக வரவேண்டும். இந்த ஊருக்கே, நாட்டுக்கே ராஜாவாக வேண்டும்; மக்களுக்கு நிறைய நல்லது செய்ய வேண்டும், யாரும் ஆண்டியாக இருக்கக் கூடாது” என்பான்.
இதைக் கேட்டு, கேட்டு வளர்ந்த ஆண்டியின் மகனும் தன்னை ஒரு ராஜா போல நினைத்துக் கொண்டான். நன்றாக படித்து, புத்திசாலியாகவும், சாமர்த்திய சாலியாகவும் வளர்ந்தான்.
வளர்ந்து பெரியவனானவுடன், தனது புத்தி சாதுரியத்தினாலும், கல்வி கேள்விகளாலும் அந்நாட்டு அரசனைக் கவர்ந்து, நாட்டுக்கு அமைச்சராக ஆனான். அதில் அவனுக்கு அதிக பெருமை. அந்நாட்டின் தலைமை அமைச்சரின் பெண்ணை திருமணம் செய்தான்.
தினமும் தங்கக் கிண்ணியில்தான் வகைவகையான சாப்பாடு, அதுவும் அவன் மனைவியே ஊட்டிவிடுவாள். இந்த ராஜ போக வாழ்க்கையில், தான் ஒரு ஆண்டியின் மகனாக இருந்ததை மறந்து விட்டான், கர்வம் வந்து விட்டது.
தருமம் செய்ய வேண்டும் என்பதையே மறந்து போனான், யாரையும் மதிப்பதில்லை. எவர் வந்து உதவி கேட்டாலும் துரத்தி விட ஆரம்பித்தான். தனது ஊழியர்களை எடுத்தெறிந்து பேசினான். இதனால் ஊழியர்களும், தோழர்களும் அவனை வெறுக்கலாயினர். அரசனோ, இவன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததால், அவர்களால் ஏதும் செய்ய இயலவில்லை.
ஒரு நாள், ஒரு நந்தவனத்தில், அவன் அதீத போதையில் இருந்த பொழுது, அவனது உதவியாள், சில கடிதங்களில் கையொப்பம் போடுமாறு கேட்டான். அவ்வாறே, கையொப்பம் இடும்பொழுது, “ஐயா, உங்களுக்கு அரசராக எல்லாத்தகுதியும் இருக்கிறது” என்றான்.
ஏற்கனவே, மது மயக்கத்தில் இருந்தவனுக்கு   இதைக் கேட்டதும், மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது. “உனக்கு என்ன வேண்டும், கேள்” என்றான். அதற்கு அந்த உதவியாள், “எனக்கு எதுவும் வேண்டாம், ஐயா. அரசரிடம் சில கையொப்பம் வாங்க வேண்டியுள்ளது, அவருக்குப் பதிலாக நீங்களே போடுங்களேன்” என்று நயவஞ்சகமாக பேசினான்.
“நீ சொல்வது சரிதான்” என்று கூறி சில அரசு ஆணைகைளிலும், சில கடிதங்களிலும் கையொப்பம் இட்டான். அந்தக் கடிதங்களுல் ஒன்று, வேற்று நாட்டு ஒற்றர் தலைவனுக்கு, தனது நாட்டில் ஒரு இடத்தை ஒதுக்குவதாகவும், அங்கே வந்து தங்கியிருந்து, தகுந்த நேரம் வரும் பொழுது தனது நாட்டின் மீது படையெடுக்குமாறும் எழுதியிருந்தது. இதைப் படிக்காமலே ஒப்பம் இட்டான்.
பின் அதைப் பெற்றுக் கொண்ட அந்த உதவியாள், நேராக அரசரிடம் சென்று அவற்றைக் காண்பித்தான். சில நாட்களாக், தானே அரசனென்று அவன் கூறிக் கொள்வதாகவும், வேற்று நாட்டு ஒற்றர்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தான்.
இதனால் கோபமடைந்த அரசர், உடனே தனது அமைச்சரை கைது செய்ய ஆணையிட்டான்.
சிறைக்கு சென்ற பின்தான், தான் ஆண்டி முத்துவின் மகன் என்பதே ஞாபகம் வந்தது. தான் யாருக்கும் உதவி செய்யாமலும், மதிக்காமலும் இருந்ததே இந்நிலைக்குக் காரணம் என்பதை உணர்ந்தான்.

அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற்
றன்று.                 நாலடியார்    1

விளக்கம்: ஆறு வகைச் சுவை உணவை அன்புடன் மனைவி உண்பிக்க, ஒரு கவளமே கொண்டு, மற்றவற்றை நீக்கியுண்ட செல்வர்களும் வறியராகி, வேறோர் இடம் போய், எளிய கூழ் உணவை இரந்து உண்பர். ஆதலால் செல்வம் நிலையானது என்று கருதத்தக்கதன்று

2 comments:

  1. Really Good Story - Each Verse of Naladiyar is having such an impact making effect on our life with simple examples.

    Continue these efforts

    ReplyDelete
  2. மிகவும் நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete