Thursday 11 October 2012

NAALADIYAAR BASED MORAL STORY-2




2.என்றும் இளமை
STORY BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
EXPLANATION TO POEM BY Prof.J.SRI CHANDRAN
ஒரு ஊரில் சீனுவாசன் என்கிறவன் இருந்தான். அவனுடன் அவன் தாய், தந்தையும் வாழ்ந்து வந்தனர்.
அவனது மனைவி வசந்தா என்பவள், தன் மாமனார், மாமியாரை மதிக்கவே மாட்டாள். அவர்கள் இருப்பதே தண்டம் என்று கருதினாள்.
அவர்களுக்கு பழைய சோற்றினைத்தான் போடுவாள். சாம்பார், தயிர், பொறியல் போன்றவற்றை தான் சாப்பிட்ட பின் மீந்திருந்தால் மட்டுமே தருவாள். அவளிடம் ஒரு பழைய, நசுங்கிய அலுமினிய பாத்திரம் ஒன்று இருந்தது, அதில்தான் பழைய சாதத்தினை தருவாள்.
இதையெல்லாம் சீனுவாசனும் கண்டுகொள்வதில்லை. சீனுவாசனின் பெற்றோர்கள் சீனுவாசனை தனியாக சந்திப்பதையே வசந்தா தவிர்த்தாள்.
“ஏன் பழைய சாதத்தினையே தருகிறாய்” என்று சீனுவாசனின் தாய் ஒரு நாள் கேட்டதற்கு, வயதான கிழவிக்கு, இதுவே அதிகம்தான். இதை மட்டும் சாப்பிடுங்கள், இதற்கு மேல் சாப்பிட்டால் தாங்காது” என்றாள்.
சீனுவாசனின் தாயாரும் அதற்கு மேல் ஒன்றும் பேசப்பிடிக்காமலும், பேச முடியாமலும் சும்மா இருந்துவிட்டார்.
சீனுவாசன், வசந்தாவிற்கு ரவிக்குமார் என்கின்ற ஒரு மகன் இருந்தான். அவன் 5 வயது குழந்தை. ஒருநாள், வசந்தா ரவிக்குமாரை கடைத்தெருவிற்கு அழைத்துச் சென்றாள். அங்கே, ஒரு கடையில் பாத்திரங்களை வாங்கிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது ரவிக்குமார், “அம்மா, பழைய பாத்திரம் எங்கு கிடைக்கும்?” என்று கேட்டான்.
“அதெல்லாம் இங்கே கிடைக்காது கண்ணா, ஏன் கேட்கிறாய்?” என்று கேட்டாள்.
“இல்லையம்மா, எங்கு கிடைக்கிறது என்று இப்பொழுதே நான் தெரிந்து கொண்டால்தானே, பிறகு வாங்க முடியும். இல்லையென்றால் நான் பெரியவனானவுடன் எவ்வாறு எந்தப் பாத்திரத்தில் உனக்கு சாப்பாடு கொடுக்க முடியும்! நீ பட்டினி கிடப்பாயே, பாவம்” என்றான்.
“யார் உனக்கு இவ்வாறு சொன்னது? பாட்டியா?” என்று கோபமாகக் கேட்டாள் வசந்தா.
“நீதானேம்மா, பாட்டியிடம் சொன்னாய்! வயதானவர்கள் பழைய பாத்திரத்தில் பழைய சாதத்தைத்தான் சாப்பிட வேண்டும், இல்லையென்றால் தாங்காது என்று” அப்பாவியாக சொன்னான் ரவிக்குமார்.
சுரீர் என்றது வசந்தாவிற்கு. வீட்டிற்கு வந்தவுடன் மாமனார், மாமியாருக்கு  ஒழுங்காக பணிவிடைகள் செய்யலானாள்.

மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்
முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு                    நாலடியார் – 19


விளக்கம்: நல்லறங்களைப் பின்னர் ஆராய்ந்து செய்வோம். இப்போது இளைஞராக இருக்கிறோம் என்று நினையாமல், பொருள் இருக்கும்போதே மறைக்காமல் அறத்தைச் செய்யுங்கள். ஏனெனில், கடுங்காற்றால் நன்கு பழுத்த பழங்கள் விழாமலிருக்க, நல்ல காய்கள் உதிர்தலும் உண்டு.

பெருங்காற்று வீசும்போது பழங்கள் உதிராமல் இருக்க, காய் உதிர்வது போல, வயதானவர் பிழைத்திருக்க வாலிபர் இறத்தலும் உண்டு. ஆதலால் இப்போது இன்பங்களை அனுபவித்து, வயது முதிர்ந்த பின் நல்லறங்களைச் செய்து கொள்வோம் என்று நினையாமல் பொருள் கிடைத்த போதே அறம் செய்ய வேண்டும் என்பது கருத்து 

No comments:

Post a Comment