Tuesday 23 October 2012

NALADIYAR BASED MORAL STORY-5



STORY BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
EXPLANATION TO POEM BY Prof.J.SRI CHANDRAN


ஸ்ரீதரன் என்னும் மாணவன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி விடுமுறையில் இருந்தான். நன்றாகப் படிப்பவன். பெற்றோர்களுக்கும், பெரியவர்களுக்கும் நல்ல மரியாதை கொடுப்பான்.
வயது வந்த பல மாணவர்களுக்கு இருப்பது போன்று இவனுக்கும் தன்னுடன் படிக்கும் ஸ்வேதா என்னும் மாணவி மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அதை அவன் காதல் என்று நினைத்தான்.
தேர்வு முடிவு வந்தது. மாவட்டத்திலேயே முதல் மாணவனாக ஸ்ரீதரன் தேறியிருந்தான். அதைத் தொடர்ந்து பொறியியற் கல்விக்கான நுழைவுத் தேர்வு முடிவும் வெளியாகியது. ஸ்ரீதரன் ஐ.ஐ.ட்டி-ல் சேருவதற்கு தகுதி பெற்றிருந்தான். வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி.
ஸ்ரீதரனுக்கோ, ஒரு புறம் மகிழ்ச்சி. வீட்டை விட்டு, ஊரை விட்டு வெளியூரில் படிக்க வேண்டுமே என்கிற கவலை மறுபுறம். முக்கியமாக ஸ்வேதாவை பிரிய வேண்டும் என்கிற வருத்தம். எப்படியாவது, என்ன காரணம் சொல்லியாவது ஐ.ஐ.ட்டி. செல்லுவதை தவிர்க்க வேண்டும் என்று யோசித்தான்.
மறுநாள் காலை ஆற்றிற்கு குளிக்க சென்றான். அங்கே ஒரு சிறுவன் கரையில் அமர்ந்து, ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் தனது தந்தையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஸ்ரீதரன், தனது குழப்பத்திலேயே, அந்தச் சிறுவன் அருகிலேயே அமர்ந்து இருந்தான். ஐ.ஐ.ட்டி. க்கு போகலாமா? இங்கேயே இருக்கலாமா? எது சரி என்று முடிவெடுக்க முடியாமல் குழம்பியிருந்தான்.
அப்பொழுது அந்தச் சிறுவன் திடீரென்று, ஆற்று நீருக்குள் இறங்க எத்தனித்தான். அவனது அப்பா, “இங்கே பாசம் வழுக்கும், வெளியே போ, மேலே போன்றார்.
இந்தப் பேச்சினால் சிந்தனை கலைந்த ஸ்ரீதரன் இது தனக்காக சொல்லப்பட்ட தகவலாக நினைத்தான்.
அவர் சொன்னது, “வழுக்கிவிடுகின்ற பாசி இங்கே தண்ணீரில் இருக்கிறது, எனவே தண்ணீரை விட்டு வெளியே போ, படியில் மேலே ஏறு” என்ற பொருளில்.
இவனோ, “இங்கே நம் ஊரில் ஸ்வேதா மீது நீ வைத்த பாசம் உன்னை வழுக்கி விடும், அதனால் வெளியூருக்கு போ, போய் படித்து மேலே முன்னேறு” என்று எடுத்துக் கொண்டான்.
ஐ.ஐ.ட்டி. சென்று படித்து முன்னேற முடிவு எடுத்தான்.

குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்.
           நாலடியார் - 46

Meaning: குடலும், கொழுப்பும், இரத்தமும், எலும்பும், ஒன்றோடொன்று சேர்ந்திருக்கின்ற நரம்பும், தோலும் இவற்றின் இடையிடையே வைத்த தசைகளும் நிணமும் ஆகிய இவைகளுள், குளிர்ந்த மாலை அணிந்த பெண் என்பவள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவள்?
இத்தகைய பொருள்களின் சேர்க்கையான உடம்பில் பற்று வைத்து நோக்கத்தை விடக் கூடாது என்பது கருத்து 

1 comment: