Friday 12 October 2012

NAALADIYAAR BASED MORAL STORY-4


4.எப்பொழுதும் துன்பமில்லை
STORY BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
EXPLANATION TO POEM BY Prof.J.SRI CHANDRAN

4. எப்பொழுதும் துன்பமில்லை (35)

குணசாகரர் என்ற ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார், சாஸ்திரங்கள் பலவும் படித்து முனிசங்க கோட்பாடு தவறாமல் வாழ்ந்தவர் அவர்.
அவருக்கென்று ஆசிரமம் கிடையாது, தங்குமிடம் கிடையாது. ஊர் ஊராக செல்வார். அங்கங்கே இருக்கும் மரத்தடியிலோ, மலைக்குகையிலோ தங்கிக்கொள்வார்.
அந்தந்த ஊரில் உள்ள மக்களிடம் அன்பாக பழகுவார். அஹிம்சையை பற்றியும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் எடுத்துக் கூறுவார்.
நமது உயிர் வாழ வேண்டும் என்பதற்காக, பிற உயிர்களை பலி கொடுக்கக் கூடாது என்று அறிவுறை கூறுவார். எந்தக் கடவுளும் விலங்குகளை பலி கேட்பதில்லை என்று விளக்குவார்.
இவ்வாறாக அழகாபுரி என்னும் ஊருக்கு அந்த் முனிவர் ஒருநாள் வந்து சேர்ந்தார். அந்த ஊரில் சந்திர சேகர சாஸ்திரி என்கிற வேத விற்பன்னர் ஒருவரும் வாழ்ந்து வந்தார்.
அழகாபுரி மக்களும் குணசாகர முனிவரின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டனர். அவர்கள் குணசாகரரின் பிரசங்கத்தை கேட்பது சந்திர சேகருக்கு பிடிக்கவில்லை. தனது செல்வாக்கு குறைவதாக உணர்ந்தார்.
அந்த மக்கள், புலால் உண்ணுவதைத் தவிர்க்க ஆரம்பித்தனர். தனது உடல் நலம் பேண, வேறொரு உயிரை சாகடிப்பது என்பது தவறு என்பது அவர்களுக்கு புரிந்தது.
குணசாகரரும், மக்கள் அன்புடன் கொடுக்கும் உணவையே விரும்பி சாப்பிட்டார். ஒரு நாள், முனிவர் ஒரு நீண்ட சொற்பொழிவாற்றப் போகிறார் என்று அவ்வூரின் மக்கள் திரண்டு வந்திருந்தனர். அனைவரும் அவருக்கு காணிக்கை கொடுப்பதற்காக நிறைய பழங்களும், தின்பண்டங்களும், ஆபரணங்களும் எடுத்து வந்திருந்தனர்.
இதனால், சந்திர சேகர சாஸ்திரிக்கு ஏகப்பட்ட எரிச்சல். இப்படியே சென்றால், தனக்கு மரியாதையே இல்லாது போய்விடும் என்று நினைத்தார்.
அங்கே, சொற்பொழிவு முடிந்தவுடன், மக்கள் தங்களது காணிக்கைகளை கொடுத்தனர். சாகர முனிவர் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்கு ஒருவேளைக்கு சாப்பிட மட்டும் தருமாறு கேட்டார்.
அப்பொழுது ஒருவர், இந்தத் தின்பண்டங்கள் கெட்டுப்போகாது, வைத்திருந்து நாளைக்கும், பிறகும் சாப்பிடலாமே? என்று கேட்டார்.
எனக்கு தேவை என்பது இப்பொழுதுதானே, நாளைக்கு தேவை என்பது மூடத்தனம் அல்லது வெறும் ஆசை மட்டும்தான். யாருக்கோ இன்று தேவையான ஒன்றினை, நானும் பயன்படுத்தாமல், அவர்களுக்கும் தராமல் இருப்பதைப் பற்றி சற்று சிந்தித்தால் ஒரு வகையில் திருட்டாகும்” என்றார்.
எனவே, எனக்கு தற்பொழுது தேவைப் படும் இந்த கனி போதும் என்று ஒருவரிடமிருந்து ஒரு கனியை மட்டும் எடுத்துக் கொண்டார். மற்றவர்கள்  தாங்கள் கொண்டு வந்ததை திரும்ப எடுத்துச் சென்றனர்.
இப்படியாக சிலநாள் கழிந்தது. ஒருநாள், பக்கத்து ஊரிலிருந்து ஒருவர் வந்து அந்த ஊர்த்தலைவரிடம் ஒரு புகார் கொடுத்தார். தனது வீட்டிலிருந்த தங்க ஆபரண்ங்கள், பணம் ஆகியவை நேற்றிரவு கொள்ளை போய் விட்டதாகவும், குணசாகர முனிவர்தான் கொள்ளையடித்தார் என்றும் கூறினார்.
இதைக் கேட்டு சிலர் ஆத்திரப்பட்டு வந்தவரைத் திட்டினர், சிலர் முனிவரைத் திட்டினர். நல்லவன் போல நாடகம் போடுபவன் ஒரு திருடனா! என்றனர்.
சந்திர சேகர சாஸ்திரி, “நாம் போய் முனிவரிடம் கேட்போம்” என்றார்.
ஊர்த்தலைவரும் அதைச் சரியென்றே சொன்னார். புகார் ஒன்று வந்தபின் யாருக்கும் விதி விலக்களிக்கக் கூடாது, சோதனை செய்வதே சரி என்றார்.
ஊர் மக்கள் அனைவரும் முனிவர் இடத்திற்கு சென்றனர். சோதனை போடும் முன்னரே, அங்கே ஒரு துணி மூட்டை இருப்பது தெரிந்தது. இது என்ன மூட்டை எனக் கேட்டதற்கு, முனிவர் தனக்குத் தெரியாது என்றார்.
அந்த மூட்டையை பிரித்ததில், திருட்டுப் போனதாக சொல்லப்பட்ட நகைகள் அதில் இருந்தன. அதைப் பார்த்த மக்கள் கொதித்தனர், ஏய், வேஷக்கார முனியே, இங்கிருந்து உடனே ஓடிப்போய்விடு, இல்லையானால் நாங்கள் உன்னைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவோம் என்றனர்.
ஊர்த்தலைவர், “அனைவரும் பொறுங்கள், நான் விசாரிக்கிறேன்” என்றார். சந்திர சேகர ஸாஸ்திரி, “எதற்கு விசாரணை, கண் கூடாகப் பார்த்தாயிற்றே?” என்றார். முனிவர் எதுவும் பேசவில்லை. மௌனமாக இருந்தார்.
ஆனாலும், ஊர்த்தலைவர் பிராது கொடுத்த பக்கத்து ஊர்க்காரரை எப்பொழுது திருடு போனதாக கேட்டார். அவர் நேற்றிரவு என்று சொன்னார்.
அப்பொழுது, அந்த ஊர்க்காவலர், “அய்யா, இவர் சொல்வது பொய். நான் ஊர்க்காவல் செய்யும் பொழுது முனிவரையும் காவல் காப்பேன். நேற்றிரவும் அதே போல், வந்து வந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். முனிவர் இதே இடத்தில் தரையில் படுத்திருந்தார்” என்றார்.
உடனே ஊர்த்தலைவர் புகார் கொடுத்தவரைப் பார்த்து, “ஏன் இவ்வாறு பொய் புகார் கொடுத்தீர்கள்” என்று கேட்டார்.
வந்தவரும் தனக்கு எதுவும் தெரியாது என்றும், சந்திர சேகர ஸாஸ்திரி இவ்வாறு செய்யச் சொன்னார் என்றும் கூறினார். தற்பொழுது மக்கள் அனைவரும் சாஸ்திரியையும், வந்தவரையும் வைய ஆரம்பித்தனர். முனிவரோ, அவர்களை மன்னித்து விடுங்கள் என்றார்.
ஊர்த்தலைவர், “அய்யா, எவ்வாறு உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட பொழுதும் எவ்வாறு உங்களால் அமைதியாக இருக்க முடிந்தது” என்று வினவினார்.
“சுலபம், இந்த மக்கள் தின்பண்டங்களை கொண்டு வந்தபொழுது, நான் ஏற்றுக்கொள்ள வில்லை, என்னவாயிற்று?” என்றார்.
“கொண்டு வந்ததை திரும்ப எடுத்துச் சென்றோம்” என்றனர் மக்கள்.
அதைப் போலத்தான் இதுவும். இந்தக் குற்றச்சாட்டுக்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, கொண்டு வந்தவரே, கொண்டு வந்தததை திரும்ப எடுத்துச் செல்கின்றார்” என்றார் முனிவர்.

கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர்                        நாலடியார் -35
பொருள்: கரும்பை ஆலையில் ஆட்டி, சாறெடுத்து, வெல்லக் கட்டியை நல்ல பதத்திலே கொண்டவர்க்ள், அந்தக் கரும்பின் சக்கை தீப்பற்றி எரிந்தால் துன்புற மாட்டார்கள். அதுபோல, முயன்று நல்லறம் செய்து பிறவிப் பயனைப் பெற்றவர் எமன் வரும்போது துன்பமடையார்.

No comments:

Post a Comment