Saturday, 15 December 2012

NALADIYAR BASED MORAL STORY-12 யார் சிறந்தவர்?


Hi,
This is Sri.Vishal.
I hope you may enjoy the story.
The story is based on the moral advocated by Quatrains composed by Jain Saints.
In an effort to generalise the morals in a simple way, these stories are published at the rate of one per week.
Please read and appreciate us to encourage my effort.
Thank you.
Sri.Vishal

யார் சிறந்தவர்?
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். விடைத்தாட்களைத் திருத்தி, மதிப்பெண்களை தெரிவிக்கப் போகிறார் ஆசிரியர். அனைத்து மாணவர்களுக்கும் விதவிதமான எதிர்பார்ப்புகள். சிலருக்கு கவலை, சிலருக்கு ஆர்வம்.
விஷால் என்கிற மாணவன், கணிதத் தேர்வில் 100 மதிப்பெண்களை எதிர்பார்த்தான்.
எதிர்பார்த்த படி, கணித வகுப்பில் ஆசிரியர் வந்து அனைவருக்கும் விடைத்தாட்களைக் கொடுத்தார். விஷால் 98 மதிப்பெண்கள் எடுத்து முதல் மாணவனாக வந்திருந்தான். ஹரி என்பவன் 96 மதிப்பெண்கள் எடுத்திருந்தான். வெங்கட் என்பவன் 76 மதிப்பெண்கள் எடுத்திருந்தான்.
விஷாலுக்கு 100 எடுக்க முடியவில்லை என்கிற வருத்தம் இருந்தாலும், முதல் இடத்தைப் பிடித்ததனால் மகிழ்ச்சி.
அடுத்ததாக, ஆசிரியர் பேசினார், “கணிதப் பாடத்தில் சிறந்த மாணவனாக வெங்கட் திகழ்கிறான், அனைவரும் அவனை கைதட்டி பாராட்டுங்கள்” என்றார்.
அதைக் கேட்டதும், விஷாலுக்கு அதிர்ச்சி. ஆசிரியரிடம் காரணத்தை வினவினான். “ஐயா, நான் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன், வெங்கட்டோ 76 மதிப்பெண்கள் வாங்கியுள்ளான், ஆனால் அவன்தான் சிறந்தவன் என்று ஏன் கூறுகிறீர்கள்”
அதற்கு ஆசிரியர், மிகவும் சிக்கலாய்ப் போன  நூல் கொத்து ஒன்றைக் கொடுத்து, “இந்த சிக்கலைப் பிரித்து, நூல் கண்டாக்கி நாளை கொண்டு வா, பிறகு ஏன் என்று காரணம் சொல்கிறேன்” என்றார்.
விஷாலுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும், வாங்கிக்கொண்டான். மாலை வீட்டிற்கு வந்தவுடன், நூலில் சிக்கலை எடுக்க அமர்ந்தான். இரவு வெகு நேரமாகியும், அவனால் சிக்கலை சரி செய்ய முடியவில்லை. மிகவும் தளர்ந்து விட்டான். பாதிக்கு மேல் சிக்கலை எடுத்தவுடன், அப்படியே புத்தகப் பையில் வைத்துவிட்டு தூங்கிவிட்டான்.
மறுநாள் பள்ளிக்கு சென்றான். எந்த வகுப்பிலும் வீட்டுப் பாடம் எழுத வில்லை. எல்லா ஆசிரியர்களிடமும் திட்டு வாங்கினான்.  கணித ஆசிரியரை காரணம் கேட்டதால் வந்த வினை, நூல் கண்டு  இல்லை யென்றால், இந்த ஏச்சுக்கள் இருக்காது என்று நினைத்தான்.  வெங்கட் மீது எரிச்சலும் கோபமும் வந்தது.

கணித வகுப்பு நேரத்தில், கணித ஆசிரியர் வந்தார். விஷால் வேண்டா வெறுப்பாய் அங்கு உட்கார்ந்திருந்தான். ஆசிரியர் நூலின் சிக்கலை எடுத்து விட்டாயா என்று கேட்டார். பாதி நூல் கண்டு செய்து விட்டேன் என்றான்.
நல்லது, வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டாயா என்றார். இல்லை, பாதி சிக்கலை எடுப்பதற்கே இரவு வெகு நேரம் ஆகிவிட்டது, எனவே, வீட்டுப்பாடங்களை எழுத முடியவில்லை என்றான்.
“இந்த சிக்கலை எடுப்பது போன்றதுதான், வெங்கட்டின் வாழ்க்கையும். தினமும் மாலையில் வீட்டிற்கு சென்றபின், வீட்டில் அவனது தந்தைக்கு உதவியாக வேலை செய்வான். பின் அவனது தாய்க்கு ஒத்தாசையாக இருப்பான். பிறகுதான், படிப்பைப் பற்றியே யோசிக்க வேண்டும்” என்றார்.
மேலும், “உனக்கு அப்படியல்ல, படிப்பதற்கு தனியறை, தனியாக மேசை, நாற்காலி. உன் வீட்டில் அதிக பட்ச ஒலியே தொலைக்காட்சி ஒலிதான், அதையும் உன்னால் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும். ஆனால், வெங்கட்டுக்கு மொத்த வீடுமே ஒரே ஒரு அறைதான். அதுதான் கூடம், சமையலறை, படுக்கையறை எல்லாம்”
“அவன் வீட்டிற்கு வெளியே செல்லும் வாகனங்கள், கால் நடைகள், மனிதர்களின் இரைச்சலும், கூப்பாடுகளும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். இந்த சூழ்நிலையில் படிப்பது என்பதே பெரிய விஷயம்; ஓரளவு தேர்ச்சி என்பது அதிசயம். ஆனால், 76 மதிப்பெண்கள் எடுப்பதென்பது மிக மிக அரிதான ஒன்று.”

“எனவேதான், நீ 98 மதிப்பெண்கள் எடுத்தாலும், அதைவிட 76 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்த வெங்கட்டை சிறந்த திறமையானவன் என்று கூறினேன், உனது திறமையை குறைவாக மதிப்பிடவில்லை, கவலைப் படாதே” என்றார்.
இதைக் கேட்டு தெளிவடைந்த விஷால், வெங்கட் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியை மறந்து, அவனிடமும் நட்பு கொண்டான்.



களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
கடைநிலத்தோ ராயினும் கற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப்படும்.        நாலடியார்    133


விளக்கம்: களர் நிலத்தில் உருவாகிய உப்பினை சான்றோர், நல்ல நஞ்சை நிலத்தில் விளைந்த நெல்லினை விட மேன்மையாகக் கருதுவர்.
அதுபோல, கீழ்குடியிற் பிறந்தவர் என்றாலும், கற்றறிந்தவராயின் அவரை மேலான குடியிலும் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்க வேண்டும்.

Saturday, 8 December 2012

NALADIYAR BASED MORAL STORY-11 தீதும் நன்றும் பிறர் தர வாரா


Hi,
This is Sri.Vishal.
I hope you may enjoy the story.
The story is based on the moral advocated by Quatrains composed by Jain Saints.
In an effort to generalise the morals in a simple way, these stories are published at the rate of one per week.
Please read and appreciate us to encourage my effort.
Thank you.
Sri.Vishal


தீதும் நன்றும் பிறர் தர வாரா

STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM


ஒரு ஊரில் சுந்தரம் என்கிற பெரு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவ்வூரில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்த போதிலும் அவர் ஒரு அடாவடிப் பேர்வழி.
தனது வணிகத்தில், நிறைய தில்லுமுல்லுகள் செய்வார். விற்பனைப் பொருட்களில் கலப்படம் செய்வது போன்ற மோசமான வேலைகளிலும் ஈடுபடுவார். வாணிகம் என்றாலே, இந்த விஷயங்கள் இல்லாமல் செய்ய முடியாது; பிழை இல்லாமல் பிழைப்பு இல்லை என்பது இவர் கருத்து.
உணவுப் பொருட்களில் கூட கலப்படம் செய்வார். இது ஒன்றும் பாவம் கிடையாது, ஒருவேளை பாவம் ஏற்பட்டாலும், கடவுளுக்கு ஏதாவது பூஜை செய்து காணிக்கை கொடுத்தோ, ஏழைகளுக்கு அன்னதானம் செய்தோ பாவத்தை கழித்து விடலாம் என்று சொல்வார்.
ஒருநாள் அரசாங்க உணவுத்துறை அதிகாரிகள் வணிகர்களின் பொருட்களை சோதனை செய்து கொண்டு வந்தனர். அப்பொழுது கலப்படம் செய்யும் வணிகர்களோடு சுந்தரமும் மாட்டிக் கொண்டார். ஒரு வாரம் கழித்து விசாரணைக்கு வரச் சொல்லியிருந்தனர்.
தானம், பூஜை போன்றவை தன்னைக் காக்கும் என்று நம்பினார். அப்பொழுது, ஒரு திகம்பர முனியைச் சந்தித்தார். எந்த பூஜை இந்த சூழ்நிலைக்கு ஏற்றது என்று கேட்டார்.
அந்த முனியோ, எந்தக் கடவுளும் இந்த மாதிரியான பழிகளுக்கு துணை போகாது. தவறு செய்ததை மனம் திருந்தி கூறினால் தண்டனையின் தீவிரம் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் நீயோ, தவறு செய்யவில்லை என்று வாதம் செய்வதோடு, தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு பரிகாரமாக என்ன பூஜை செய்யலாம் என்று யோசிக்கிறாய்.
மேலும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யப்படும் பூஜையும், தானங்களும்தான் மதிப்பும், மரியாதையும் பெறுகின்றன. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை புரிந்து கொள் என்றார்.

 அவர் பேச்சில் திருப்தியடையாத சுந்தரம், கோபமடைந்து அவரை திட்டிவிட்டு, வேறொரு கபட ஜோதிடரை சந்தித்தார். அவரது ஏற்பாட்டின் படி பெரிய அளவில் அன்னதானம் நடத்தினார்.

அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவு அருந்திய மக்கள் வாந்தி எடுத்ததால், மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப் பட்டனர். கலப்பட பொருளில் செய்யப்பட்ட உணவை  உண்டதால் இவ்வாறு ஆயிற்று என மருத்துவர் கூறினர்.
இதனால், சுந்தரம் கைது செய்யப்பட்டார். அவரது கடை மூடப்பட்டது. சிறைக்குச் சென்ற பின் தான், பூஜை, புனஸ்காரத்தால் பாவம் போகாது. நமது நடத்தைதான் நமக்கு நல்லதையும் கெட்டதையும் தருகிறது என்பதை உணர்ந்தார்.

உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
பெறற்பால அனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்.      நாலடியார் – 104

விளக்கம்: வந்து சேரும் தீமைகளை முனிவர்களாலும் தடுக்க முடியாது. அவ்வாறே, நன்மைகளையும் யாராலும் நிறுத்த முடியாது. மழை பெய்யாது ஒழிந்தால் அதை பெய்விப்பாரும் இல்லை. அதிகமாகப் பெய்தால் அதை நிறுத்துவாரும் இல்லை.
அப்படியே  தீவினைப்பயன் நேரிட்ட போதும் நல்வினைப் பயன் நேரிட்ட போதும் தடுக்கும் ஆற்றல் இல்லை! அவற்றின் பயன்களை அனுபவித்தே ஆக வேண்டும். 

Saturday, 1 December 2012

NALADIYAR BASED MORAL STORY-10


Hi,
This is Sri.Vishal.
I hope you may enjoy the story.
The story is based on the moral advocated by Quatrains composed by Jain Saints.
In an effort to generalise the morals in a simple way, these stories are published at the rate of one per week.
Please read and appreciate us to encourage my effort.
Thank you.
Sri.Vishal

பாத்திரம் அறிந்து பிச்சையிடு

STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM


ஒரு ஊரில் கருப்பையன் என்ற கணவான் வாழ்ந்தார். அந்த ஊரிலும் பக்கத்து ஊர்களிலும் அவருக்கு மிக்க செல்வாக்கு இருந்தது. அவர் சொல்வதை மக்கள் மதித்து நடப்பர்.
தன்னிடம் வந்து உதவி கேட்பவர்களுக்கு, இல்லையென்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வார்.
கோவிந்தன் என்ற நண்பர் அவருக்கு, “கண்டவர்களுக்கும் உதவி செய்யாதே” என்று அடிக்கடி அறிவுறைகள் கூறுவார்.
கருப்பையனோ, தருமம் தலை காக்கும், உதவி செய்வதை நிறுத்தக்கூடாது என்பார்.
ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போட வேண்டும்; பாத்திரம் அறிந்துதான் பிச்சையிட வேண்டும். தகுதியில்லாத பேர்வழிகளுக்கு தருமம் செய்தால், தலையை வாங்கிவிடும்; எனவே எச்சரிக்கையாய் இரு  என்று அவர் நண்பர் தொடர்ந்து எச்சரித்தார்.
ஒருநாள் பக்கத்து ஊரிலிருந்து ஒரு நபர் தனது நண்பர் ஒருவரை அழைத்து வந்து, அவர் தொழில் நடத்துவதற்கு, வங்கியில் கடன் வாங்க வேண்டும்; அதற்கு வங்கி அதிகாரிக்கு ஒரு சிபாரிசு கடிதம் கொடுக்க வேண்டி கேட்டார்.


இவருக்கு அவரை யாரென்று தெரியாது, இருந்தாலும் அழைத்து வந்தவரை தெரியும் ஆதலால், கடன் கேட்டு விண்ணப்பித்தவரை தனக்கு பத்து வருடங்களாகத் தெரியும் என்றும் அவருக்கு கடன் கொடுக்கலாம் என்றும் கடிதம் கொடுத்தார். வங்கியின் மேலாளரும், இந்தக் கடிதத்தைப் பார்த்தவுடனே, மேலே எதுவும் பேசாமல் கடன் கொடுத்துவிட்டார்.
கடனை வாங்கிய நபர், அச்சு இயந்திரங்கள் வாங்கி அச்சகம் ஒன்றினை நடத்தினார்.  ஒருநாள், கள்ளப்பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விட்டார் என்று அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எந்த வழிமுறையும் பின்பற்றாமல், எந்த விசாரணையையும் மேற்கொள்ளாமல், வங்கியின் பணத்தை கடனாகக் கொடுத்ததற்காக வங்கி மேலாளரும் கைது செய்யப்பட்டார்.
அந்த நபரையும், அவரது தொழில் பற்றியும் தனக்கு நன்றாகத் தெரியும் என்று சான்றளித்த கருப்பையனையும் போலீசார் விசாரித்தனர். தனக்கு அவரை தெரியாது, ஆனால் அவருக்கு உதவி செய்யவே, சிபாரிசு கடிதம் கொடுத்தேன் என்று கருப்பையன் சொன்னதை போலீஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. உடந்தையாக இருந்திருக்கலாம் என்று சந்தேகித்து அவரையும் கைது செய்தனர்.
அப்பொழுதுதான், “பாத்திரம் அறிந்து பிச்சையிடு” என்று கோவிந்தன் கூறியது நினைவுக்கு வந்தது. ஆனாலும் என்ன செய்ய முடியும். காலம் கடந்து வந்த ஞானம் ஆயிற்றே?.

கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படுஞ் சொல்    நாலடியார் – 100

விளக்கம்: குறுங்கோலால் அடித்து ஒலிக்கப்படும் முரசின் ஒலியை ஒரு காத தூரம் வரையில் இருப்போர் மட்டுமே கேட்பர்! மேகத்தின் இடி ஓசையை ஒரு யோசனை தூரம் வரையில் இருப்போர் மட்டுமே கேட்பர்! ஆனால் தகுதியுடையவர்க்குக் கொடுத்தார் என்னும் புகழ்ச் சொல்லை, ஒன்றன் மேல் ஒன்றாக உள்ள மூவுலகங்களில் உள்ளாரும் கேட்பர். (இதனால் பாத்திரம் அறிந்து பிச்சையிடல் உணர்த்தப்பட்டது 

Saturday, 24 November 2012

NALADIYAR BASED MORAL STORY-9


Hi,
This is Sri.Vishal.
I hope you may enjoy the story.
The story is based on the moral advocated by Quatrains composed by Jain Saints.
In an effort to generalise the morals in a simple way, these stories are published at the rate of one per week.
Please read and appreciate us to encourage my effort.
Thank you.
Sri.Vishal

சினமின்மை
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM


நமது நாட்டின் சுதந்திரப் போர் நடந்து கொண்டிருந்த சமயம். பல சத்யாக்ரகிகள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர்.
சிறையைப் பார்வையிட ஒரு மேலதிகாரி அன்று வருவதாக இருந்தது. அவர் கண்டிப்பானவர் என்பதால் சிறை ஊழியர்கள் சற்று பரபரப்பாக இருந்தனர். மதிய நேரம், அந்த மேலதிகாரி வந்தார். கைதிகளை அவர் விசாரிக்கும் தோரணையிலிருந்தே, அவர் முரட்டுத்தனமானவர் என்பதும் புரிந்தது.
ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், ஒரு இடத்தில் அமர்ந்து ஏதோ வேலையில் மும்முரமாக மூழ்கியிருந்ததால், இந்த அதிகாரி வந்ததை கவனிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அந்த ஆங்கிலேய அதிகாரி, தனது பூட் காலினால் அந்த வீரரை எட்டி உதைத்தார்.
கீழே விழுந்த வீரர் எழுந்து, “மன்னித்து விடுங்கள், தாங்கள் வருவதை நான் கவனிக்க வில்லை” என்றார். ஆனாலும், அந்த அதிகாரி ஆத்திரம் அடங்காமல் கன்னாபின்னாவென்று கத்திவிட்டு சென்றார்.
பிறகு, எல்லா வேலைகளும் வழக்கம் போல நடந்து கொண்டிருந்தன. ஆறு மாதங்கள் கழித்து, அதே அதிகாரி மறுபடியும் ஆய்வு செய்ய வரப்போகிறார் என்றதும் பரபரப்பு.
அதே சத்யாகிரகிகள் அந்த சிறையில் இருந்தனர். கைதிகளின் உணவின் தரத்தைக் குறையுங்கள், இவர்களுக்கு ஏன் உப்பிட்ட உணவு என்றெல்லாம் பொறுப்பற்ற வகையில் உத்தரவிட்டுக் கொண்டே வந்தார்.
ஒரு இடத்தில், ஒரு கைதி இவரைப் பார்த்து புன்னகைத்தார். அவரை இவருக்கு நினைவில்லை. “நீ யார், ஏன் இங்கு நிற்கிறாய்?” என்று கேட்டார் அதிகாரி.“தங்களுக்கு ஒரு பரிசு வைத்துள்ளேன், நானே செய்த காலணி இது” என்றார்.
அந்த ஆங்கிலேய அதிகாரி விரும்பவில்லை யென்றாலும், வேண்டா வெறுப்பாய் வாங்கிப் பார்த்தார். கால் அளவு மிகச்சரியாக இருந்தது.
எனது அளவு எப்படி தெரியும் என்று ஆச்சரியத்தார் அதிகாரி.
“சென்றமுறை தாங்கள் இங்கு வந்திருந்த பொழுது, தங்களது பூட் காலால் என்னை உதைத்து தள்ளினீர்கள். அந்தத் தடம் எனது சட்டையில் நன்றாக பதிந்தது” என்றார்.
அந்த அளவைக் கொண்டுதான் இந்த காலணியை உருவாக்கினேன் என அமைதியாகக் கூறினார் அந்தக் கைதி.
அதைக் கேட்டு அந்தக் கடுமையான அதிகாரியின் மனமும் இளகியது. அது முதல் அவர் யாரிடமும் கடுஞ்சொற்கள் கூட கூறுவதில்லை.

மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.              நாலடியார் - 61
விளக்கம்: தம்மை மதித்து நடப்பாரும் நடக்கட்டும்; மதிக்காது அவமதித்து நடப்பாரும் நடக்கட்டும்; அற்ப ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் உட்காருதலால், அந்நிலையை உணர்ந்து சிந்திக்கும் சான்றோர், தம்மை அவமதிப்போர் மீது சீறி விழும் சினம் இலராய் இருத்தல் நல்லது

கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு                                             நாலடியார் – 70
விளக்கம்: நாய் தமது உடம்பைக் கடிப்பதைப் பார்த்தும், தம் வாயினால் நாயைக் கடித்தவர்கள் இவ்வுலகில் இல்

 கீழ் மக்கள் கீழ்த்தரமான சொற்களைச் சொல்லும்போது மேன் மக்கள், அவர்களுக்கு எதிராக அச்சொற்களைத் திருப்பிச் சொல்வார்களோ?.

Saturday, 17 November 2012

NALADIYAR BASED MORAL STORY-8


STORY BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM


த்யானம் 
ஜிநசந்திரன் என்றொருவர் வாழ்ந்து வந்தார். கல்வி கேள்விகளில் சிறந்தவர். ஆதிபகவனின் சிறந்த பக்தர்.
ஆதீஸ்வரர் ஆலயம் இருக்கும் தெருவில்தான் அவரது வீடும் இருந்தது. தினமும் ஆலயம் செல்வார். வழிபடுவார். கோவிலை சுத்தமாக வைத்துக் கொள்வார். கோவிலுக்கு வருபவர்களிடம் அன்பாக பழகுவார். அவர்களுக்கு ஏதேனும் தேவையென்றால் முகம் சுழிக்காமல் உதவி செய்வார்.
அந்த நல்லவருக்கு, ஒரு மனக்குழப்பம். தன்னால் அமைதியாக அமர்ந்து த்யானம் செய்ய முடியவில்லையே என்கிற கவலை.
ஒருநாள் மாலை ஜிநாலயத்திற்கு அருகில் ஓடும் ஆற்றின் படித்துறை ஒன்றிற்கு சென்றார். அந்த மாலை நேரத்தில் எவரும் ஆற்றிற்கு வர மாட்டார்கள் என நினைத்தார்.
அந்த இடம் அமைதியாக இருந்ததால், த்யானம் செய்ய ஏற்ற இடம் என்று அவருக்கு தோன்றியது, அங்கேயே அமர்ந்து, “ஓம் ஜிநாய நம” என்று அமைதியாக சொன்னார். அப்பொழுது, ஒரு பெண் அங்கே குளிக்க வந்தாள்.

உடனே, ஜிநசந்திரன் கண்களை மூடிக்கொண்டு, “ஓம் ஜிநாய நம” என்று சொன்னார். அந்தப் பெண் அருகே வருவது அவளது கொலுசின் ஓசையால் அறிய முடிந்தது.
அட என்னது இது? என்று நினைத்துக் கொண்டு, இரு கைகளாலும்  காதுகளை மூடிக்கொண்டார். அதற்குள் அவள் அருகாமையில் வந்து விட்டாள், அவள் தலையில் வைத்திருந்த மல்லிகை வாசம் வந்தது.
இதனால் சலிப்படைந்த ஜிநசந்திரன், தனது தோளில் போட்டிருந்த அங்க வஸ்திரத்தை (துண்டு) எடுத்து கண், காது, மூக்கு எல்லாவற்றையும் மூடிக்கொண்டு “ஓம் ஜிநாய நம” என்று அமைதியாக சொன்னார்.
“அந்தப் பெண் போயிருப்பாளோ, எதுவும் அறிய முடியவில்லையே” என்று நினைத்தார்.
புரிந்ததா! அவரால் ஏன் த்யானம் செய்ய முடியவில்லை என்று.

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்.                     நாலடியார் – 59

Meaning:மெய், வாய், கண், மூக்கு, செவி எனப் பெயர் பெற்ற ஐந்து புலன்களை அடக்கி, அவற்றின் வழியாக வரும் மிகுந்த ஆசையை மனக் கலக்கமின்றித் தன்னிடம் சேராமல் பாதுகாத்து, நல்லொழுக்கத்தில் செலுத்தும் வல்லமையுடையவனே தவறாமல் வீடுபேறு அடைவான்

Sunday, 11 November 2012

Naaladiyar Based Moral Story-7


றந்தும் வாழ்பவர்கள்

ஒரு ஊரில், வீரசேனன் என்கிற செல்வந்தர் வாழ்ந்து வந்தார், செல்வந்தரென்றாலும் கஞ்சர். எச்சில் கையால் காக்கை ஓட்டாத மனிதர் என்று சொல்வார்களே அதைப் போன்றவர்.
அவர் தினமும் தனது கஜானாவில் (கருவூலத்தில்) சேர்ந்துள்ள காசு, பணம், நகை மூட்டைகளை கணக்கிட்டு வைத்துக் கொள்வார்.
அதே ஊரில், ஜெயசேனன் என்பரும் வாழ்ந்தார். அவர் ஒன்றும் செல்வந்தர் இல்லை. ஆனாலும் தனக்கு கிடைக்கும் திரவியத்தைக் கொண்டு, தானும் சிக்கனமாக செலவு செய்து பிறருக்கும் தேவையானவற்றை தானமாகத் தருவார்.
கோடைக்காலங்களில் வழிப் போக்கர்களுக்கு உதவும் வகையில் தண்ணீர் பந்தல் அமைப்பார் ஜெயசேனன். அதற்கு தண்ணீர் கொண்டு வர வேலையாள் ஒருவரையும் அமர்த்தி, அவருக்கு சம்பளமும் கொடுத்தார்.
“ஏன், நீ சம்பாதித்த பணத்தையெல்லாம் இவ்வாறு வீணடிக்கிறாய், தண்ணீர் குடித்த எவரும் உனக்கு எவ்விதத்திலும் உதவ மாட்டார்கள்” என்று செல்வந்தரான வீரசேனன், ஜெயசேனனுக்கு அறிவுரை கூறினார்.
இந்த அறிவுரையைப் பொருட்படுத்தாது, ஜெயசேனன் தொடர்ந்து அறப்பணிகளில் தனது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை செலவழித்தார்.
ஒருநாள், வழக்கம் போல வீரசேனன் தனது கருவூலத்தில் நகை, பண இருப்புகளை சரிபார்க்கும் பொழுது ஒரு மூட்டை பணம் குறைவதாக தோன்றியது. உடனே, அவருக்கு வியர்த்தது, பேச்சு வரவில்லை. சிறிது நேரத்தில் நெஞ்சு வலி வந்து இறந்து போனார்.
வீரசேனன் இறந்ததை கேள்விப் பட்டு, ஜெயசேனன் வருத்தப்பட்டார். பிறகு, தண்ணீர் பந்தலுக்கு நிரந்தர கட்டிடம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். அது போதாதென்று நினைத்தவர், அங்கே ஒரு கிணறு ஒன்றினையும் ஏற்படுத்தினார். இதனால், நிரந்தரமாக எப்பொழுதும் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வழி கிடைத்தது.
அப்பொழுது, தண்ணீர் பந்தலுக்கு தினமும் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றிய நபர், “ஏனிப்படி செய்தீர்கள், எனக்கு இனி வேலையில்லையே! நான் என்ன செய்வேன்” என்று கேட்டார்.
அதற்கு ஜெயசேனன், “நிறைய பணம் வைத்திருந்த வீரசேனன் யாருக்கும் தராமல் பணத்தை அப்படியே விட்டு விட்டு இறந்து போனான், புல் நுனியிலுள்ள நீர்த்துளி போன்று நிலையில்லாத் தன்மையுடையது இந்த வாழ்க்கை; அது போல் நானும் இறந்து போனால், இந்தத் தண்ணீர் பந்தல் இல்லாது போகும், அதற்காகவே எனது இறப்பினாலும் பாதிக்கப் படாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாட்டினை செய்தேன். கவலைப் படாதே, இந்தக் கட்டிடத்தையும், கிணற்றையும் நிர்வகிக்கவும் பராமரிக்கவும் உன்னை அமர்த்துகிறேன்” என்றார்.
உணர்ச்சிப் பெருக்கிட்ட அந்த வேலையாள், “அய்யா, உங்களுக்கு மறைவே இல்லை. நீங்கள் இறந்தபின்னும் வாழ்வீர்கள்” என்று வாழ்த்தினான்.

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை; - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்            நாலடியார் – 29


விளக்கம்: ஒருவன் இப்பொழுது நின்று கொண்டிருந்தான்; உட்கார்ந்தான்; படுத்தான்; தன் உறவினர் அலறி அழ இறந்தான் என்று கூறப்படுவதால், புல் நுனியிலிருக்கும் நீர்த்துளியைப் போல நிலையில்லாத தன்மையுடையது இந்த உடம்பு என்று எண்ணி, இப்பொழுதே அறவினைகளைச் செய்க

Naladiyar is the collection of poems (400 in numbers) created by Jain monks. This naladiyar is made simple by these stories.