Saturday, 16 March 2013

NAALADIYAR STORY 20 உழைப்பு


20  உழைப்பு
ஒரு சோம்பேறி செல்வந்தன் இருந்தான். அவனுக்கு மூதாதையர் சம்பாதித்து வைத்த சொத்துக்கள் நிறைய இருந்தன. பல ஏக்கர் மாந்தோப்புகளும், தென்னந்தோப்புகளும் இருந்தன. அதிலிருந்த மரங்களெல்லாம் அவனது தாத்தாவால் நடப்பட்டு, வளர்க்கப் பட்டவை. இந்த மரங்களை பராமரிப்பதற்கு, ஒரு வேலைக்காரனை அமர்த்தியிருந்தான்.
அந்த வேலைக்காரன் சுறுசுறுப்பானவன்; ஒவ்வொரு நாளும், காலையில் தோப்பில், மரங்களின் கிளைகளை கழிப்பது, பாத்தி வெட்டுவது, நீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளை செய்து விட்டு, மதியம் எங்கோ சென்று விடுவான்.
அரை நாள் சம்பளமே வாங்கிக்கொள்வான். அந்தப் பாதி ஊதியத்திலேயே, ஒரு பற்றாக்குறை வாழ்க்கை வாழ்ந்தான். அவனது உறவினர்களும், உற்றார்களும் அவனை குறை கூறினர், பெரியவர்கள், “முதலாளிக்கு ஏற்ற சோம்பேறி தொழிலாளி என்று வைதார்கள். முதலாளியும் இதைக் கண்டு கொள்ள வில்லை. வேலைக்காரன் எப்பொழுதும் போல் மதிய நேரங்களில் எங்கேயோ சென்று விடுவான்.
இப்படியே, ஒரு ஏழு ஆண்டுகள் கழிந்தன. செல்வந்தனின் தோப்பிலிருந்த மரங்கள் வயதாகி பட்டு விட்டன. புதியதாக மரங்கள் நடப்படாததால், வருமானம் இல்லை. செல்வந்தன் வறியவனான். ஆனாலும் வேலைக்காரன் மட்டும் பழங்கள் கொண்டு வந்து விற்பனை செய்தான். கொஞ்சம், கொஞ்சமாக செல்வந்தனாகினான்.
அனைவருக்கும் வியப்பு, எவ்வாறு, எந்த மரங்களும் இல்லாத பொழுது, அவனுக்கு மட்டும் எங்கிருந்து பழங்கள் வருகின்றன என்று வியந்தனர்.
கடந்த ஏழு ஆண்டுகளாக, ஒரு முழுத் தோப்பினை உருவாக்கினேன். மதியம் வரை அன்றாடப் பிழைப்பிற்காக பழைய தோப்பினில் வேலை செய்து, பின் எனது தோப்பிற்கு வந்து கடினமாக உழைத்தேன். அதன் பலன்தான் இது என்றான்.
அவனது புத்திசாலித்தனத்தை அனைவரும் போற்றினர்.

கோளாற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல்
கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப;
வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
தாளாளர்க்கு உண்டோ தவறு?      நாலடியார்  191

பொருள்: குளத்தின் கீழ் உள்ள பயிர் நீரை மிகுதியாகக் கொள்ளாது; அது போல ஒரு முயற்சியுமின்றி தம் உறவினர் தருவதை உண்டு, அவ்வுறவினர் வறுமையுற்றால் சாவர். ஆனால், வாளின் மேல் கூத்தாடும் பெண்ணின் கண்ணைப்போல் சுறுசுறுப்பாக உழைப்பவருக்கு இத்தகைய பிழைபட்ட வாழ்வு உண்டாகுமோ?

Sunday, 10 March 2013

Naaladiyaar story 22 ஆடா, மாடா?


ஆடா, மாடா?
STORY BY Engineerr/Lawyer.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM

ராமசாமி என்பவர் ஜல்லிக்கட்டு காளை ஒன்றினை வளர்த்து வந்தார்; மேலும் ஆடு ஒன்றையும் வளர்த்தார். நரி ஒன்று வழி தவறி ராமசாமி தோட்டத்திற்கு வந்துவிட்டது, நரி வளர்த்தால் அதிர்ஷ்டம் என்று யாரோ சொன்னதால், அதனையும் ராமசாமி தீனி போட்டு வளர்க்க ஆரம்பித்தார்.
ஒரு நாள், காளை பயிற்சி பெறும் பொழுது கீழே விழுந்ததால் அதன் கால் முறிந்து விட்டது. மருத்துவர் பலவித மருந்துகள் கொடுத்தும் பலனில்லை. சில நாட்கள் கழித்து, ஒரு அரிதான மருந்து ஒன்றினை கொணர்ந்து காளையின் காலுக்கு போட்டார். பிறகு, இந்த மருந்தும் வேலை செய்யவில்லையென்றால், அடிமாடாக விற்று விடுங்கள் என்று கூறினார்.
ராமசாமியும், மாடு சரியாகி விட்டால் உங்களுக்கு ஆடு வெட்டி விருந்து வைக்கிறேன், சரியாகா விட்டால் மாடுதான் விருந்து என்றார்.
ராமசாமி அவ்வாறு சொன்னதை ஆடும், நரியும் கேட்டு விட்டன. நரி, “ஆட்டினை பலமுறை சாப்பிட்டுள்ளோம், ஒரு முறை கூட மாட்டினை சாப்பிடவில்லை” என்று நினைத்தது. ஆடோ, தான் எப்படியும் ஒரு நாள் பிரியாணியாக வேண்டியதுதான், ஆனால் மாடு ஜல்லிக்கட்டில் சாதிக்க வேண்டியுள்ளது, அதனால் சாகக்கூடாது என்று நினைத்தது.
எனவே, மாட்டினை தொடர்ந்து உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தது. அந்த தொடர் ஆதரவினாலேயே, காளை குணமாகி எழுந்து நடக்க ஆரம்பித்தது. ராமசாமி வீட்டில் மகிழ்ச்சி. நரிக்கு சப்பென்றாகி விட்டது; இருந்தாலும் ஆட்டிறைச்சி கிடைக்கப் போவதை எண்ணி மகிழ்ந்தது.
மருத்துவர் கூறினார், “எப்பொழுதும் ஆடுதானா? ஒரு மாற்றத்திற்கு நரி இறைச்சி சமையுங்களேன்”.
யானை யானையவர் நண்பொரிஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.                         நாலடியார்  213  
பொருள்:யானை பலநாள் பழகியிருந்தும் சமயம் வாய்க்கும்போது பாகனையே கொல்லும்! ஆனால் நாயோ, தன்னை வளர்த்தவன் சினம் கொண்டு எறிந்த வேலானது தனது உடலில் அழுந்திக் கிடக்க, அவனைக் கண்டதும் வாலை ஆட்டி அவன் அருகே செல்லும். யானை போன்ற பெருமையுடையார் நட்பை விலக்கி, நாய் போன்ற இழிவுத் தன்மை உடையராயினும் அவரது நட்பை விரும்பிக் கொள்ளல் வேண்டும்.
கருத்து: கல்வி நலம், குல நலம் ஆகியவற்றை மட்டுமே கருதாமல், மனநலத்தையும் அறிந்து ஒருவரிடம் நட்புக்கொள்ள வேண்டும். அகன்ற கல்வியும், சிறந்த குடியும் இல்லையெனினும் மனம் தூயராயின் அவருடன் நட்புக் கொள்ளலாம்.

Saturday, 2 March 2013

Naaladiyaar story 19 தூய மனது


STORY BY Engineerr/Lawyer.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM

19   தூய மனது
தரணேந்திரன் என்ற அரசன், தன் நாட்டினை செம்மையாக ஆண்டு வந்தான். ஒவ்வொரு வேலைக்கும் தகுந்த ஆட்களை தேர்ந்தெடுத்து அமர்த்தி இருந்ததால், அனைத்து வேலைகளும் செவ்வனே நடைபெற்றன. மக்கள் வளமாகவும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்தனர். தனக்கு வேண்டியவர், நண்பர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அரசாட்சி செய்தான்.
ஒருநாள் அரண்மனைப் பூங்காவில், சிறுவனான இளவரசன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, அவனது காலில் முள் குத்தி விட்டது.
இதைக் கேள்விப்பட்ட அரசிக்கு கோபம் வந்து, பூங்காவின் நிர்வாகியை அழைத்து, கன்னா பின்னாவென்று திட்டினாள். அப்படியும் அவளுக்கு கோபம் தீரவில்லை, தனது கணவனான அரசனிடம் புகார் செய்தாள். பூங்காவை  சரியாக பெருக்கி தூய்மையாக வைக்காததால், தங்களது ஆசை மகனின் காலில் முள் தைத்து விட்டது என்றாள்.
அவள் அவ்வாறு புகார் சொல்லும் பொழுது, அமைச்சரும் உடனிருந்தார். பூங்காவோ பெரியது, பெருக்குவது என்பது எளிதான ஒன்றல்ல, அப்படியே பெருக்கினாலும்,முள் போன்றவை திரும்பத் திரும்ப வந்து கொண்டேதானே இருக்கும்; ஆனாலும் புகாரளிப்பது அரசி, புண் பட்டிருப்பதோ அரசனின் செல்ல மகன், அதனால் பூங்கா நிர்வாகிக்கு பெரிய தண்டனை கிடைக்கும் என்று எண்ணினார்.
அரசன் மறுநாள் முடிவு சொல்வதாக கூறினான்.
மறுநாள், தனது மகனுக்கு செருப்பு ஒன்று வாங்கிக் கொடுத்தான்.

கடுக்கி ஒருவன் கடுங்குறளைப் பேசி
மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்க மிலாதவர் தூய மனத்தர்;
விளக்கினுள் ஒண்சுடரே போன்று.                     நாலடியார்    189
பொருள்: ஒருவன் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு பிறர்பற்றி மிகவும் பொல்லாத கோள் சொற்களைச் சொல்லித் தம் அறிவை மயங்கச் செய்தாலும், அப்பிறர்பால் சிறிதும் மனவேறுபாடின்றி அசைவில்லாது இருப்பவரே, விளக்கில் ஒளிரும் சுடர் போலத் தூய மனத்தவராவர்.
புறங்கூறலைப் பொருட்படுத்தாமையும் பெருமையாகும் என்பது கருத்து.

Saturday, 23 February 2013

Naaladiyaar story 18 பக்தி


18 பக்தி
STORY BY Engineerr/Lawyer.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM



18 பக்தி
சிரேணிகன் என்கிற குரு ஒருவர் இருந்தார், அவருக்கு பல பணக்கார சிஷ்யர்களும், பக்தர்களும் இருந்தனர். அவர்கள் இல்லங்களில் ஆடம்பரமான பூஜைகளை நடத்தி வைப்பார். எப்பொழுதும் பிஸியான சாஸ்திரியாகவே இருந்தார்.
அன்று தீபாவளிக்கு மறுநாள், லக்ஷ்மி பூஜையை பல பக்தர்கள் வீட்டில் அடுத்தடுத்து செய்வதாக ஏற்பாடு. ஒரு ஏழை பக்தன், தனது வீட்டிலும் பூஜை செய்ய வருமாறு அன்புடன் அழைத்தான்.
குருவோ, “ஏழைக்கு எதற்கப்பா ஆடம்பரமான லக்ஷ்மி பூஜை, நன்றாக நீராடி விட்டு ஓம், ஓம் என்றோ, நமோ நமோ என்றோ சொல்லிக் கொண்டே லக்ஷ்மி பெயரையும் சொல்ல வேண்டியதுதானே” என்றார்.
அவர் இளக்காரமாக சொல்கிறார் என்பது புரியாமல், அந்த ஏழையும் வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு லக்ஷ்மி நமோ என்று சொல்லிக் கொண்டே இருந்தார் நம்பிக்கையுடன்.
அன்று மாலை, ஒரு பிச்சைக்காரக் கிழவி அந்த ஏழை வீட்டிற்கு வந்து பிச்சை கேட்டாள். ஏழை வீட்டில், ஒரேயொரு சீப்பு வாழைப்பழம் தவிர வேறு எதுவும் இல்லை; அந்த வாழைப் பழத்தினை கொடுத்தார். அந்தக் கிழவி, லக்ஷ்மி தேவியாக உருமாறி பல வரங்களை ஏழைக்கு அருளினாள், ஏழை செல்வந்தரானார். தனக்கு வழி காட்டிய!? குருவிற்கு காணிக்கை கொடுக்க சென்றார்.
அப்பொழுதுதான் குருவிற்கு புரிந்தது, “ஆடம்பரத்தில் இல்லை பக்தி, எளிமையிலும், நோக்கத்திலும், தூய்மையிலும்தான் தெய்வம் வாழ்கிறது” என்பது.

இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு                     நாலடியார்  91

பொருள்: பொருள் இல்லாதபோதும் தம்மால் இயன்ற அளவு பொருள் உள்ளதுபோல் மகிழ்ந்து இயல்பாகக் கொடுக்கும் குணமுள்ள மக்களுக்கு மறுமை உலகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்

அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்                    நாலடியார் 172

பொருள்: அறத்தின் நெறியை அறியுங்கள்! எமனுக்கு அஞ்சுங்கள்! அறியார் கூறும் கடுஞ் சொல்லைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! வஞ்சனைக் குணம் உங்களிடம் வராதபடி பாதுகாத்துக் கொள்ளுங்கள்! தீயோர் நட்பை வெறுத்து ஒதுக்குங்கள்! எப்போதும் பொ¢யோர் அறவுரைகளைக் கேளுங்கள்

Saturday, 16 February 2013

NALADIAR BASED STORY 16 வாழ்க்கையில் இதுவெல்லாம் சகஜம்


16 வாழ்க்கையில் இதுவெல்லாம் சகஜம்
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

EXPLANATION TO THE POEM Prof.J.SRI CHANDRAN

அது ஒரு திருமண வைபவம். திருமணம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது, விழாவிற்கு வந்தவர்கள் கூட்டமாய் கூடி உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
அதில் ஒரு குழாமில், நடு நாயகமாக அண்ணாசாமியப்பன்  என்பவர் அமர்ந்திருந்தார்; மற்றவர்களும் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். கேட்பதற்கு ஆட்கள் இருந்ததால் அண்ணாசாமியப்பனும் தான் எல்லாம் தெரிந்தவர் போல பெருமை சாற்றிக் கொண்டிருந்தார்.
நீதிபதி ஒருவரை தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், அவர் முன்னாளில் சாதாரண வக்கீலாக இருந்த பொழுது, வழக்குகள் கிடைக்காமல் இருந்ததாகவும், இவர்தான் அவருக்கு உதவிகள் செய்ததாகவும் கூறிக்கொண்டார்.
அப்பொழுது, அதை உண்மையென்று நம்பிய ஒருவர், தனக்கு முதியோர் உதவி பணம் அரசாங்கத்திடமிருந்து வரவில்லை, வட்டாட்சி அலுவலகத்தில் மனு செய்து செய்துள்ளதாகவும், அங்கே யாரையாவது தெரியுமா என்று வினவினார். தனக்கு வட்டாட்சியரை நன்றாகத் தெரியும் என்றார்; உடனே வேறொருவர் தான் பட்டாவிற்கு மனு செய்துள்ளதாகச் சொன்னார்.
இவ்வாறாக ஆளாளுக்கு ஏதோதோ கூற, நம்மவரும் நிறைய வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டே வந்தார். ஒருவர் மட்டும் எதுவும் கேட்கவில்லை, அமைதியாகவே இருந்தார். உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்றார் அண்ணாசாமியப்பன்.
“ஆமாம், ஆனால் தனிமையில்தான் சொல்லவேண்டும்” என்றார்; “சரி, வாருங்கள்” என்று தனியாக அழைத்துச் சென்று நமது ஜம்பப் பேர்வழி, “இப்பொழுது சொல்லுங்கள்” என்றார்.
அந்த புதிய மனிதர், “நான்தான் இந்த ஊருக்கு தாசில்தார், அதாவது வட்டாட்சியர்” என்றார்.
அண்ணாசாமியப்பனுக்கோ, ஒருவேளை இவரும் தன்னைப் போலவே ஒரு பொய்ப் பேர்வழியாக இருப்பாரோ என்று சந்தேகம்; அப்படியென்றால் முன்னரே கூறியிருக்கலாமே என்று கேட்டார்.
அந்த நபர், “அவைக்கு நடுவில் சொன்னால், உங்களுக்கு மான நட்டம் உருவாகும், எனக்கு அது நோக்கமல்ல; இனிமேலும் இது போன்ற புரட்டுகளில் ஈடுபடாதீர்கள்” என்று அறிவுறுத்தி எச்சரித்தார்.
அப்பொழுது அவரின் பெருந்தன்மை புரிந்தது.

புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து                         நாலடியார்  155

பொருள்: கல்வியறிவு இல்லாத பயனற்ற வீணர் அவையில் நூல்களைக் கல்லாத ஒருவன் பொருத்தமில்லாமல் உரைப்பனவற்றையும் (அறிவுடையோர்) அவனது குற்றங்களைச் சுட்டிக் காட்டினால், அவன் பல்லோரிடை அவமானப்பட நேரிடும் என்பதற்காக இரங்கி, மனம் வருந்தினாலும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பர்

Wednesday, 6 February 2013

NALADIYAR BASED STORY 17 எது சிறந்த அரசு?


எது சிறந்த அரசு?
STORY BY Engineerr/Lawyer.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM


நம் இந்திய நாட்டின் இரு அண்டை மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல்வர்கள் ஆண்டு வந்தனர். ஒரு மாநிலம் நல்ல வளமாய் இருந்தது. செழிப்பான விவசாயம், விளைச்சல், தொழிற்சாலை, வளமான வர்த்தகம், அறிவார்ந்த மக்கள் என்று அமோகமாய் இருந்தது.
மற்றொரு மாநிலத்தில் நல்ல அளவான மழை பெய்தது. ஆனாலும், நல்ல விளைச்சல் இல்லை. கலையில்லா முகத்துடன் மக்கள் ஏழ்மையில் இருந்தனர். முதலமைச்சருக்கு வருத்தம், இருண்ட சூழ்நிலையிலிருந்து மாநிலத்தையும், மக்களையும் காப்பாற்ற முடியவில்லையே என்கிற ஏக்கம். மாநிலத்தின் முதலமைச்சரும் இலவசத் திட்டங்கள் நிறைய அறிவித்தார். மக்களும் அந்த இலவசங்களை பெற்றனர்.
இந்தச் சூழ்நிலையில் ஒருநாள், மாநில முதல்வர்களின் மாநாடு தலைநகர் தில்லியில் நடந்தது. இரு மாநில முதல்வர்களும் அங்கே சந்தித்துக் கொண்டனர்.
இரண்டாம் மாநிலத்தின் முதல்வர் தன்னைப் பற்றி பெருமையாய் சொல்லிக் கொண்டார். தான் இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்றும்; தன் மக்களுக்கு பல நல்ல இலவசத் திட்டங்களை அறிவித்து சிறப்பானதாக தன் அரசினை நடத்துவதாகவும் பெருமை பேசினார்.
முதலாமவர், “நீங்கள் சொல்வது சரிதான், எங்களுக்கு அது மாதிரி ஒரு வாய்ப்பே கிடைக்க வில்லை. அது மாதிரி யாசகம் பெறுவதற்கு எங்கள் மாநிலத்தில் யாருமே இல்லை” என்றார் அமைதியாக.
சுரீர் என்றது அடுத்தவருக்கு;  உழைத்து முன்னேறுவதற்கு வாய்ப்பை  ஏற்படுத்தித் தராமல் மக்களை சோம்பேறியாக்கியது தனது தவறு என்பதை உணர்ந்தார்.
உண்மையில் சிறந்த அரசு என்பது ஏழைகள் இல்லாமல் ஆக்குவதுதானே தவிர ஏழைகளுக்கு இலவசம் அளிப்பதில் அல்ல.

பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்கு
உரியார் உரிமை அடக்கம் - தெரியுங்கால்
செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப எனின்.                 நாலடியார்  170
பொருள்: பெரியோர்க்குப் பெருமை தருவது, எளிமையையுணர்த்தும் செருக்கிலாப் பணிவுடைமையாகும். ஆராய்ந்து பார்க்கும்போது தம்மைச் சார்ந்தவரின் வறுமைத் துன்பத்தைப் போக்குவாராயின் செல்வம் உடையவரும்; செல்வரே ஆவர். (பெரியோர் பணிவுடைமையும், அடக்கமுடைமையும், ஈகைத் தன்மையும் உடையவராவர் என்பதும், ஆதலின் அவரைப் பிழைத்தல் தகாது என்பதும் கருத்தாகும்). 
கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும்.                   நாலடியார்  340
பொருள்: ஒருவன் கற்ற கல்வியையும், அவனது மேன்மையையும், நற்குடிப் பிறப்பையும் அயலார் பாராட்டிக் கூறினால் பெருமையாம். இவ்வாறின்றித் தன்னைத் தானே புகழ்ந்து கூறிக் கொள்வானாயின், அவனுக்கு மைத்துனர் (கேலி பேசுவோர்) பலராவர். மேலும் அவன் மருந்தாலும் தணியாத பித்தன் என்றும் இகழப்படுவான். (தற்புகழ்ச்சியும் பேதைமைத்தே என்பது கருத்து)

Saturday, 12 January 2013

NALADIYAR BASED STORY 15 சொர்க்கத்திலும் தண்டனை


Hi,

This is Sri.Vishal.
I hope you may enjoy the story.
The story is based on the moral advocated by Quatrains composed by Jain Saints.
In an effort to generalise the morals in a simple way, these stories are published at the rate of one per week.
Please read and appreciate us to encourage my effort.
Thank you.

Sri.Vishal

சொர்க்கத்திலும் தண்டனை

STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM


வசந்த சேனன் என்கிற செல்வந்தர் ஒருவர் வளமுடன் வாழ்ந்து வந்தார்.  நிறைய அறங்கள் செய்தார். சில கோவில்களை கட்டுவித்தார், பல கோவில்களுக்கு பூஜைகள் நடக்க அறக்கட்டளைகள் ஏற்படுத்தினார். இது தவிர, தன்னை வந்து இரப்பார்க்கு இல்லையென்று கூறாமல் உதவி செய்து வந்தார்.

அவர் இருந்த ஊரில் ஏரிகளும், குளங்களும், ஆறும் இருந்தன. அதனால் பலதரப் பட்ட பறவைகளும் அந்த ஊருக்கு கோடைக்காலத்தில் வந்து சென்றன.
அதில் சில, பல அதிசயமான பறவைகளை வசந்த சேனன் பிடித்து தனது கூண்டில் வளர்த்து வந்தார். அவற்றுக்கு வேளை தவறாமல் தரமான தீனியை தர மறக்க மாட்டார். அவற்றின் மீது மிகுந்த ஆசை வைத்திருந்தார். தினமும் மாலை நேரத்தில் அவற்றுடன் பேசுவார். அவை போடும் ஒலியை ரசித்துக் கேட்பார்.
இவ்வாறு இருக்கையில், ஒரு நாள் இறந்து சொர்க்கத்திற்கு போனார். அங்கே அவருக்கு எல்லா போகமும் கிடைத்தது. ஆனாலும் அவரை ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் சிறையில் அடைத்து வைத்தனர். அவருக்கு ஒரே குழப்பம்; எதற்காக தன்னை சிறையில் அடைக்கின்றனர் என்று புரிய வில்லை.
அங்கே இருந்த ஒரு அதிகாரியை காரணம் வினவினார். அவரும், “நீ பல தருமங்கள் செய்ததனால் இங்கே சொர்க்கத்திற்கு வந்துள்ளாய்; இருப்பினும் நீ பல பறவைகளை கூண்டிற்குள் அடைத்து, அவற்றின் சுதந்திரத்தை பறித்ததனால் இவ்வாறு சிறையில் அடைக்கப் படுகிறாய்” என்றார்.
தான் என்ன தவறு செய்தோம் என்று வசந்த சேனனுக்கு அப்பொழுது புரிந்தது.

இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க்
கரும்பார் கழனியுள் சேர்வர் - சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.
  நாலடியார் – 122
பொருள்: வண்டுகள் ஒலிக்கும் காட்டில் வாழும் கவுதாரியையும், காடையையும் பிடித்துக் கூட்டில் அடைத்து வைப்பவர்கள், மறு பிறவியில் பகைவர்களிடம் அடிமைகளாகி, காலில் விலங்குகள் பூட்டப்பட்டு, வலிய பார் நிலங்களிலோ கழனிகளிலோ வேலை வாங்கப்படுவார்கள்